பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவோம்: வரிந்து கட்டும் ஆந்திர அரசு
மும்பை: காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்டுவது உறுதி என கர்நாடக முதல்வர் எடியூரப்பா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அணை கட்டும் திட்டத்தால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றார்.
இதுகுறித்து தமிழக முதல்வருக்கு தாம் கடிதம் எழுதி இருப்பதாக குறிப்பிட்ட அவர், தமிழகம் மேகதாது திட்டத்தை எதிர்ப்பதில்தான் பிடிவாதமாக உள்ளது என்றார்.
"மேகதாதுவில் அணை கட்ட சட்டத்தில் சாதகமான அம்சங்கள் உள்ளன. இத்திட்டத்தைச் செயல்படுத்த நாங்கள் சக்தியை மீறி முயற்சி செய்கிறோம்.
"அதனால் மேகதாதுவில் அணை கட்டுவது நூறு விழுக்காடு உறுதி. கர்நாடக மக்களுக்கு இந்த உறுதிமொழியை அளிக்கிறேன்," என்று எடியூரப்பா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தமிழகத்தில் இருந்து அனைத்துக்கட்சிக் குழு அண்மையில் டெல்லி சென்று மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்துப் பேசியது. அப்போது மேகதாது திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கக் கூடாது என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார் முதல்வர் எடியூரப்பா. அதன் பின்னர் அணை கட்டுவது உறுதி என்றும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கான நடைமுறைகளை கர்நாடக அரசு முழுமையாக செயல்படுத்தவில்லை என்றும் இதன் காரணமாக அணை கட்ட அனுமதி வழங்கப்படாது என்றும் மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் தமிழக குழுவிடம் தெரிவித்ததாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
இவ்வாறு தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், தமிழக - ஆந்திர எல்லையில் பாலாற்றின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைவராக உள்ள கட்சி இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கடந்த 2003ஆம் ஆண்டு 0.6 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணை கட்ட குப்பம் அருகே கணேசபுரம் பகுதியில் இடம் தேர்வு செய்தது. ஆனால் தமிழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதால் அணை கட்டுவது சாத்தியமாகவில்லை. இரு அண்டை மாநிலங்களுடனும் தமிழகம் பிரச்சினையை எதிர்நோக்கி உள்ளது.

