புதுடெல்லி: சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி மிக விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அம்மருந்து குறித்த பரிசோதனைகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை ஏற்படக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.
இரண்டாவது அலையைப் போல் பாதிப்புகள் மோசமாக இருக்காது என்று கூறப்படும் நிலையில், அடுத்த அலையில் சிறார்கள் அதிகம் பாதிக்கப்படலாம் என்றும் ஒருதரப்பினர் கூறுகின்றனர்.
இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தியா குப்தா என்ற 12 வயது சிறுமி ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், கிருமித்தொற்றால் சிறார்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அவர்களுக்கு தடுப்பூசி போட விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
அம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, மத்திய சுகாதார அமைச்சு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதன்படி, தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சிறார்களுக்கான தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த ஸைடஸ் கேடிலா என்ற நிறுவனம், 12 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசியை தற்போது பரிசோதித்து முடித்துள்ளதாகவும் மிக விரைவில் அத்தடுப்பூசியைப் பயன்படுத்த உரிய அனுமதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
அனுமதி கிடைத்தவுடன் மிக விரைவில் அத்தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு பதில் மனுவில் மேலும் கூறியுள்ளது.

