திருவனந்தபுரம்: கேரளாவில் ஸிக்கா கிருமியால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் கிருமித்தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனைகள் அதிக அளவில் நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, கொரோனா பாதிப்பும் இம்மாநிலத்தில் அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை அங்கு புதிதாக 13,750 பேருக்கு கொரோனா கிருமி தொற்றியுள்ளது. 130 பேர் பலியாகிவிட்டனர்.
கடந்த இரு வாரங்களாக அங்கு நாள்தோறும் குறைந்தபட்சம் நூறு கொரோனா இறப்புகள் பதிவாகின்றன. அரசு, தனியார் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஒரே அளவில் நீடித்து வருகிறது. மாநிலம் முழுவதும் கடந்த இரு தினங்களில் 300,750 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. எனினும், 250,000 என்ற இலக்கை எட்ட முடியவில்லை.
இதற்கிடையே, கேரளாவில் இதுவரை 11.7 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்களில் சுமார் 4.4 மில்லியன் பேர் இரு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில், மேலும் ஆறு மில்லியன் தடுப்பூசிகளை உடனடியாக வழங்குமாறு மத்திய அரசிடம் கேரளா கோரி உள்ளது.

