ராகுல் காந்தி: பயமற்றவர்கள்தான் காங்கிரஸ் கட்சிக்குத் தேவை
புதுடெல்லி: காந்திய கொள்கை மீது நம்பிக்கை உடையவர் கள் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்குத் தேவை என்றும் அத்த கையவர்களுக்காகவே அக்கட்சி செயல்படுகிறது என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார். கட்சியின் கொள்கையில் இருந்து விலகிச் செல்ல விரும்புபவர்கள் கட்சியில் இருக்கத் தேவையில்லை என்றும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான சந்திப்புக் கூட்டத்தில் பேசியபோது அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார். "பயமற்றவர்கள் தான் நமது கட்சிக்கு தேவை. காங்கிரஸ் கட்சிக்கு வெளியே பயமற்ற பலர் இருக்கிறார்கள். அவர்களை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும்," என்றார் ராகுல்.
சீதனமாக வரும் நகைகள் வேண்டாம்: மணமகனுக்கு குவியும் வாழ்த்துகள்
திருவனந்தபுரம்: திருமண நிகழ்வு முடிந்த கையோடு மணப்பெண் அணிந்திருந்த நகைகளை கழற்றச்செய்து பெண் வீட்டாரிடம் ஒப்படைத்த மணமகனைப் பலரும் பாராட்டி உள்ளனர். கேரளாவைச் சேர்ந்த 28 வயதான சதீஷுக்கும் 21 வயதான சுருதிக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது (படம்). மணமகளுக்கு அவரது குடும்பத்தார் 50 பவுன் நகைகளை சீதனமாக அளித்திருந்தனர். இந்நிலையில் கோவிலில் நடைபெற்ற திருமணம் முடிந்தவுடன், வரதட்சணை வாங்கக் கூடாது என்பதுதான் தமது கொள்கை என்று மணமகளிடம் தெரிவித்த சதீஷ், இரண்டு வளையல்களை மட்டும் வைத்துக் கொள்ளுமாறு கூறி, மற்ற நகைகளை பெற்றோரிடமே ஒப்படைத்துவிடுமாறு கூறியுள்ளார். மணமகளும் அவ்வாறே செய்ததையடுத்து பலரும் இச்செயலைப் பாராட்டி உள்ளனர்.
அரசின் நோக்கம்: அமைச்சர் விளக்கம்
புதுடெல்லி: வேளாண் துறையின் அடித்தள கட்டமைப்பை வலுப்படுத்துவதில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தொடா்ந்து விழிப்புணா்வுடன் செயல்பட்டு வருவதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். முந்தைய ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட கொள்கைகளின் விளைவாகவே நாட்டின் வேளாண்மை துறை மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது என்றும் அந்தக் குறைகளை மோடி அரசு சரி செய்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். "புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததின் முக்கிய நோக்கம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என்பதுதான். அது மட்டுமின்றி வேளாண்மை துறை வளா்ச்சியையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதும் அரசின் நோக்கம்," என்றார் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்.
மகாராஷ்டிரா: 5,947 பள்ளிகள் திறப்பு
மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றுப் பாதிப்பு இல்லாத பகுதிகளில் உள்ள 5,947 பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. 8 முதல் 12ஆம் வகுப்புகள் மட்டுமே முதலில் நடக்கும் என்றும் மற்ற வகுப்புகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. முதல் நாளன்று 416,599 மாணவர்கள் பள்ளிக்குச் சென்றுள்ளனர்.
விஷ சாராயத்துக்கு 16 பேர் பலி
பாட்னா: விஷ சாராயம் அருந்திய 16 பேர் பலியான சம்பவம் பீகாரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள மேற்கு சம்பரான் மாவட்டத்தில் நேற்று முன்தினம் எட்டு பேர் விஷ சாராயத்துக்கு பலியான நிலையில், பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட னர். எனினும், பலி எண்ணிக்கை 16ஆக அதிகரித்தது. இது தொடர்பாக போலிசார் ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.

