திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை வரதட்சணைக்காக பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டதாக 15,143 வழக்குகள் பதிவாகி உள்ளன.
மேலும், அங்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் வரதட்சணை விவகாரத்தால் 66 பெண்கள் உயிரை மாய்த்துக்கொண்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
கேரளாவில் வரதட்சணைக் கொடுமை அதிகரித்து வருவதாகப் பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
நாட்டிலேயே கல்வியறிவு பெற்ற மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்து வருகிறது கேரளா.
அம்மாநிலத்தில் படித்த பெண்களே தவறான முடிவுகளை எடுப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் பத்து திருமணங்கள் நடந்தால் அதில் ஏழு, பெண்கள் வரதட்சணை தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்வதாக காவல்துறை புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வருவதாக ஆனந்த விகடன் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
அதிகரித்து வரும் புகார்களை அடுத்து, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வரதட்சணை தடுப்பு அதிகாரிகளை நியமித்துள்ளதாக சுகாதார, பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் அம்மாநிலத்தில் அமலில் உள்ள வரதட்சணை தடுப்புச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்பு திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு பகுதிகளில் உள்ள வட்டார அலுவலகங்களில் மட்டுமே இத்தகைய அதிகாரிகள் இருந்தனர் என்று சுட்டிக்காட்டி உள்ள அவர், இப்போது 14 மாவட்டங்களிலும் தனித்தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
"பெண்கள், குழந்தைகள் நலத்துறை இயக்குநர் வரதட்சணை தடுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். வரதட்சணைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதற்காக இந்தச் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
"மேலும், மாவட்ட ஆலோசனைக் குழுக்களை உருவாக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
"இதற்கு நல்ல பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்," என்று அமைச்சர் வீணா ஜார்ஜ் மேலும் கூறியுள்ளார்.

