புதுடெல்லி: நாடு முழுவதும் மக்கள் நடமாட்டம் மீண்டும் அதிகரித்துள்ளது என்றும் இதன் மூலம் தொற்றுப் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்மையில் சேகரிக்கப்பட்ட 'கூகல்' நிறுவனத்தின் தரவுகளைப் பார்க்கும்போது கவலை எழுவதாக அந்த அமைச்சு கூறியுள்ளது.
குறிப்பிட்ட இடங்கள் என்று இல்லாமல் சுற்றுலாத் தலங்கள், கடைத்தெருக்கள், சந்தைகள் என அனைத்து இடங்களிலும் மக்கள் நடமாட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டும் சுகாதார அமைச்சு, நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இதுதான் நிலைமை எனக்கூறியுள்ளது.
"கொரோனா நெருக்கடிக்கு முன்பு இருந்த நிலைக்கு பல மாவட்டங்கள் திரும்பி உள்ளன. சில மாவட்டங்களில் முன்பு காணப்பட்டதை விட அதிகமான மக்கள் பொது இடங்களில் கூடுகின்றனர்.
"இது நிச்சயம் கவலை அளிக்கக் கூடிய விஷயம்," என்று மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
எனவே ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சு வலியுறுத்தி உள்ளது.
'கூகல்' தரவுகளின் அடிப்படையில், சமூக நடமாட்டம் குறித்து ஆராய்ந்தபோது, கடந்த மே 10ஆம் தேதி முதல் ஜூலை 10ஆம் தேதி வரையிலான ஒரு மாத காலத்தில் மட்டும் மக்கள் நடமாட்டம் ஒட்டு மொத்தத்தில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.
இரு மாதங்களுக்குள் நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா நெருக்கடி தொடங்குவதற்கு முன்பு இருந்த மக்கள் நடமாட்டத்தை மீண்டும் காண முடிவதாக சுகாதார அமைச்சு கூறுகிறது.
சுற்றுலாத் தலங்களில் கூட்டம் அதிகரிப்பது கவலை தருகிறது எனில், அத்தகைய இடங்கள் இல்லாத மாவட்டங்களிலும் கூட மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள், அங்கு வருகை தருபவர்கள் முகக்கவசம் அணியாமல் நடமாடுவதை பெரும் அபாயம் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கேரளா, மகாராஷ்டிரா, வடகிழக்கு மாநிலங்களில் தொற்றுப்பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. நாடு மூன்றாவது கொரோனா அலையை எதிர்நோக்கி உள்ள வேளையில், மக்கள் தங்கள் நடமாட்டத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரே மாதத்தில் இருமடங்கு அதிகரிப்பு: தொற்று அதிகரிக்க வாய்ப்பு

