பெங்களூரு: கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா எந்த நேரத்திலும் விலகக்கூடும் என மீண்டும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
பதவி விலகல் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சித் தலைமை அவருக்கு சற்று கால அவகாசம் கொடுத்துள்ளது என்றும் கூறப்படுகிறது. எனினும் அத்தகவல் வெறும் வதந்தி என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பியபோது, கர்நாடகாவில் பாஜக தலைமை மாற்றப்படும் என்று கூறப்படுவதைப் பற்றி தமக்கு எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்றார்.
மேலும், பாஜக மேலிடத்தில் இருந்து யாரும் தொடர்புகொள்ளவில்லை என்றும், அவ்வாறு ஏதேனும் தகவல் இருப்பின் செய்தியாளர்கள் அதை தம்மிடம் தெரிவிக்கலாம் என்றும் முதல்வர் எடியூரப்பா கூறினார்.
அண்மைய சில மாதங்களாக கர்நாடக பாஜகவில் உட்கட்சி மோதல் நீடித்து வருகிறது. முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்க வேண்டும் என அக்கட்சி எம்எல்ஏக்களில் ஒரு பிரிவினர் வலியுறுத்தி வருகின்றனர்.
எனினும், பதவி விலக மறுத்து வரும் முதல்வர் எடியூரப்பா, அதிருப்தியில் உள்ளவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டதுடன், டெல்லியில் உள்ள பாஜக மூத்த தலைவர்களையும் சமாளித்து வந்தார்.
இந்நிலையில், அண்மையில் திடீர் பயணமாக டெல்லி சென்ற முதல்வர் எடியூரப்பா அங்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
அப்போது முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என கட்சித் தலைமை அவருக்கு உத்தரவிட்டதாகவும் அதற்கான கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், புதிய முதல்வரை தனது ஒப்புதலுடன்தான் முடிவு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியதாகவும் கட்சித் தலைமை இதை ஏற்றுக்கொண்டதாகவும் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' இணையத்தளம் தெரிவித்துள்ளது.
எனினும் கட்சித் தலைமையுட னான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடியூரப்பா, தாம் பதவி விலக வேண்டிய அவசியம் எழவில்லை என்றார்.
இந்நிலையில் வரும் 26ஆம் தேதி பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் பெங்களூருவில் நடைபெற உள்ளது. அச்சமயம் முதல்வர் எடியூரப்பா முக்கிய அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

