செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
506e66c1-32af-4d9a-bf6a-790d823df021
-

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடக்கம்

புதுடெல்லி: இன்று தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் 31 மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. மேலும் ஆறு அவசர சட்டங்களை நிறைவேற்றவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதே வேளையில் ரஃபேல் விமான பேரம், கொரோனா விவகாரம், பெட்ரோல் விலை உயர்வு ஆகியவற்றை எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் எனத் தெரிகிறது. அரசின் முக்கிய கொள்கை அறிவிப்புகளை இந்த கூட்டத்தொடரில் வெளியிட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

78 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்

ஸ்ரீநகர்: நடப்பாண்டில் காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின்போது 78 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 39 பேர் லஷ்கர் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றவர்கள் ஹிஸ்புல் முஜாகிதீன், அல்-பதர் தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்றும் காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு ஐ.ஜி. விஜய்குமார் தெரிவித்தார். கொல்லப்பட்ட அனைவரும் அண்மையில்தான் இந்த இயக்கங்களில் சேர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

'செல்ஃபி' எடுக்க முயன்று குளத்து நீரில் மூழ்கி மூன்று சிறுமிகள் பலி

லக்னோ: ஆபத்தான வகையில் 'செல்ஃபி' எடுக்க முயன்று பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் இவ்வாறு உயிரிழந்துவிட்டனர். அங்குள்ள தியோரியா மாவட்டத்தில் மகாதேவ்தால் குளத்தில் வெள்ளிக்கிழமையன்று ஏழு சிறுமிகள் படகுச் சவாரி சென்றுள்ளனர். அப்போது மூன்று சிறுமிகள் தங்கள் கைபேசி மூலம் 'செல்ஃபி' எடுக்க முயன்றதில் படகு கவிழ்ந்து, அனைவரும் தண்ணீரில் மூழ்கினர். நீச்சல் தெரிந்த நான்கு சிறுமிகளும் படகோட்டியும் எப்படியோ கரை சேர்ந்துவிட்ட நிலையில், மூன்று பேர் நீரில் மூழ்கி மாண்டனர். சிறுமிகள் அனைவரும் 8 முதல் 12 வயதுக்குட்பட்டவர்களாவர்.

முடிவுக்கு வந்த மோதல்: பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக சித்து தேர்வு

சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரசில் கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த மோதல் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. அம்மாநில காங்கிரஸ் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் அமரிந்தர் சிங்குக்கும் சித்துவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்ததையடுத்து, இருதரப்பிடமும் கட்சித் தலைமை தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்தியது. அதன் முடிவில் மாநிலத் தலைவராக சித்து தேர்வானார். எனினும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அமரிந்தர் சிங் தான் முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது.

மேலும் ஐவருக்கு 'ஸிக்கா' பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் ஸிக்கா கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது. அங்கு பாதிப்புள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட இடங்களில் தீவிர பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் 30 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் ஐந்து பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதியானது என கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

முதல்வர் வேட்பாளர்: செய்தியாளர் கேள்விக்கு பதிலளிக்காத பிரியங்கா

லக்னோ: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்படுவாரா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேரடியாக பதிலளிக்க மறுத்துவிட்டார். லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசியபோது, தாம் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யவில்லை என்றும் பொறுத்திருந்து பார்க்குமாறும் அவர் தெரிவித்தார். முதல்வர் வேட்பாளர் குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, "இப்போதே அனைத்தையும் உங்களிடம் தெரிவிக்க வேண்டுமா?" என்று பதில் கேள்வி எழுப்பினார் பிரியங்கா. எனினும் தாம் முதல்வர் வேட்பாளர் அல்ல என்று அவர் கூறவில்லை என அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

பதவியை இழந்தார் நடிகை ரோஜா

அமராவதி: நடிகையும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவுமான நடிகை ரோஜா, தாம் வகித்து வந்த ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரியத் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தன் கட்சி நிர்வாகிகள் ஒரு பதவியில் மட்டுமே இருக்க வேண்டும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதனால் ஏற்கெனவே எம்எல்ஏவாக உள்ளவர்கள் கூடுதலாக வகிக்கும் பொறுப்புகள், பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளன. இதனால் ரோஜாவுக்கும் பதவி பறிபோனது.