செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
02e00c64-e83f-440f-aad1-6d88e7b5f227
-

சீனாவுக்கு ஆதரவாக செய்தி: இந்திய ஊடகம் பணம் பெற்றதாக புகார்

புதுடெல்லி: இந்திய ஊடகங்கள் சீன அரசின் கொள்கைக ளுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் நெவில்லே ராய் சிங்கம் என்பவர் ஏற்பாடு செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. இந்தியாவில் செயல்படும் 'நியூஸ் கிளிக்' என்ற இணைய ஊடகத்துக்கு இதில் தொடர்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2018 தொடங்கி இதுநாள் வரை வெளிநாடுகளில் இருந்து சுமார் ரூ.38 கோடி அளவு இந்த ஊடக நிறுவனம் பெற்றுள்ளது என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

பிரசாரத்தை தொடங்குகிறார் மாயாவதி

லக்னோ: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை முன்னாள் முதல்வர் மாயாவதி எதிர்வரும் 23ஆம் தேதி அயோத்தி நகரில் இருந்து தொடங்குகிறார். தனது ஆட்சி மீண்டும் அமைந்தால் அம்மாநிலத்தில் பிராமண சமூகத்தினரின் நலன்கள் காக்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார். இதற்கிடையே தேர்தல் கூட்டணி அமைப்பதில் காங்கிரஸ் கட்சி திறந்த மனதுடன் செயல்படும் என அக்கட்சியின் உத்தரப் பிரதேச பொறுப்பாளரான பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் மேகதாது அணை குறித்து விவாதிக்க திமுக வலியுறுத்து

பெங்களூரு: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என திமுக எம்பி திருச்சி சிவா வவலியுறுத்தி உள்ளார். மாநிலங்களவை விதி 267ன் கீழ் அவையை ஒத்திவைத்து விவாதிக்கக் கோரி, அவர் நோட்டீஸ் அளித்துள்ளார். தண்ணீருக்காக மோதல் நடந்துகொண்டிருக்கும் நிலையில், கர்நாடகாவில் உள்ள கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது.

இரு பேருந்துகள் மோதி ஏழு பேர் பலி

லக்னோ: இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஏழு பேர் பலியாகினர். மேலும் எட்டு பேர் படுகாயமடைந்தனர். இந்த துயரச் சம்பவம் நேற்று முன்தினம் உத்தரப்பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு கிராம மக்கள் சிலர் பேருந்து மூலம் ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது வழியில் சாலையோரம் அப்பேருந்து நிறுத்தப்பட்டது. அப்போது மற்றொரு பேருந்து அதன் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது.