மும்பை: கடந்த இரு தினங்களாக மும்பை மாநகரை புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கும் கனமழையானது மேலும் ஐந்து நாள்களுக்கு நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து மும்பைக்கு கனமழைக்கான 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் அண்மைய சில தினங்களாக பலத்த மழை நீடிக்கிறது.
மும்பையில் இரு தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் பெய்த அடைமழையால் மொத்த நகரமும் வெள்ளக்காடானது. சில பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து, ரயில் போக்கு வரத்து நிலைகுத்திப் போனது. பல சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் ஏராளமான வாகனங்களுக்குள் தண்ணீர் புகுந்ததில் அவை பழுதடைந்து ஆங்காங்கே நின்றுவிட்டன. மும்பையில் கனமழைக்கு தாக்குப்பிடிக்க இயலாமல் சுவர் இடிந்து விழுந்த சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையே தலைநகர் டெல்லியிலும் கனமழை வெளுத்துக்கட்டுகிறது.
ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் மேலும் சில தினங்களுக்கு கனமழை நீடிக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

