கல்விக்கூடங்களைத் திறக்க எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் பரிந்துரை
புதுடெல்லி: இந்தியாவில் தடுப்பூசிப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 41,18,46,401 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அதனையடுத்து அங்கு கொவிட்-19 தொற்றின் இரண்டாவது அலையால் உச்சமடைந்த தொற்றுப் பாதிப்புகள், இப்போது படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது.
கடந்த 125 நாட்களுக்குப் பிறகு நேற்று, தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சு, நேற்று வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் 30,093 பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனுடன் மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 3,11,74,322 ஆகியுள்ளது. தொற்று பாதிப்பால் ஒரேநாளில் மேலும் 374 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,14,482 ஆக உயர்ந்து உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 45,254 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3,03,53,710 ஆக உயர்வடைந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.32 விழுக்காடாக உள்ளது.
இந்தியா முழுவதும் நேற்றைய நிலவரப்படி 4,06,130 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 117 நாட்களில் இந்த எண்ணிக்கை மிகக் குறைவாகும்.
நாடு முழுவதும், இதுவரை 3,03,53,710 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.37% ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 45,254 கொரோனா நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இது சிகிச்சை பெறும் மொத்த எண்ணிக்கையில் 1.30 விழுக்காடாகும்.
வாராந்திர தொற்று உறுதி விகிதம் 5 விழுக்காட்டிற்கும் குறைவாக சரிந்து 2.06% ஆக உள்ளது.
தினசரி தொற்று விகிதம் தொடர்ந்து 29 நாட்களாக 3 விழுக்காட்டிற்கும் குறைவாக 1.68%, ஆகப் பதிவாகி உள்ளது.
இந்நிலையில் தொற்று பரவல் விகிதம் 5 விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ள மாவட்டங்களில் சமூக இடைவெளி, முகக்கவசம் ஆகிய பாதுகாப்புக் கட்டுப்பாட்டுடன் படிப்படியாக பள்ளிகளைத் திறக்கலாம்.
இதுகுறித்து மாணாக்கர், பெற்றோர் ஆகியோரிடம் அவர்களின் விருப்பத்தை அறிந்து பள்ளிகள் முடிவெடுக்க வேண்டும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்தார்.
இப்போது இணையம் வழி பாடம் நடத்தப்படுகிறது. இந்நிலையில் வசதியில்லாத மாணவர்கள் பலருக்கும் கணினி, இணைய வசதி கிடைக்காத சூழல் உள்ளது.
இது கல்வியில் பாகுபாட்டை ஏற்படுத்துவதாக உள்ளது. மாணவர்கள் பள்ளிக்குச்சென்று கல்வி பயில்வதால் இந்தப் பாகுபாட்டைப் போக்கலாம் என்று டாக்டர் ரன்தீப் கூறினார்.

