செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
b5fda65a-49c3-43ef-99d6-d1edce98bd8c
-

'மத்திய அரசை பற்றி பொய் தகவல்களை காங்கிரஸ் பரப்புகிறது'

புதுடெல்லி: "மத்திய அரசை பற்றி பொய் தகவல்களை காங்கிரஸ் பரப்பி வருகிறது," என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், "காங்கிரஸ் கட்சி எல்லாத் தேர்தல்களிலும் வீழ்ச்சி கண்டு வருகிறது. அசாம், மேற்கு வங்காளம், கேரளா என பல மாநிலங்களில் தோல்வியைச் சந்தித்தாலும் மக்களின் நம்பிக்கையை எவ்வாறு பெறுவது என்பது குறித்து அவர்கள் ஆலோசிக்கவில்லை, அதற்கான முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக, காங்கிரஸ் கட்சியினர் எதிர்மறை எண்ணங்களைப் பரப்புவதில்தான் குறியாக உள்ளனர். காங்கிரசின் போக்கு கவலையளிப்பதாக உள்ளது.

"காங்கிரசைக் காட்டிலும் நாம் மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்கள். தொற்றின் மூன்றாவது அலை வந்தால் அதை எதிர்கொள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தயாராக இருக்க வேண்டும். அந்தந்தப் பகுதிகளில் தடுப்பூசி போடுவதை உறுதிசெய்ய வேண்டும்," என்று அவர் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார். நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு நடந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி இவ்வாறு கூறினார்.

ஆந்திரா: ஒரு மணி நேரம் வேகவைத்தும் வேகாத முட்டை

திருப்பதி: நெல்லூர் மாவட்டத்தின் வரிகுண்டபாடு பகுதியைச் சேர்ந்த கிராமப் பகுதிகளில் முட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு மினி வேன் ஊருக்குள் வந்தது.

முட்டைகளைக் கொண்டு வந்த வியாபாரி, 30 முட்டைகள் ரூ.130-க்கு என கூவி கூவி விற்பனை செய்தார்.

குறைந்த விலைக்கு முட்டை கிடைக்கிறது என எண்ணி, அங்கு கூடிய மக்கள் கூட்டம் வரிசை பிடித்து நின்று ஒவ்வொருவரும் ஏராளமான முட்டைகளை வாங்கிச் சென்றனர். ஒரு மணி நேரத்திற்குள் அனைத்து முட்டைகளையும் விற்றுவிட்டு அந்த ஊரைவிட்டு நழுவினார் முட்டை வியாபாரி.

முட்டையை வாங்கியவர்களில் சிலர் அவரவர் வீடுகளில் முட்டையை சமைக்கத் தொடங்கினர். சுமார் ஒரு மணி நேரம் ஆகியும் முட்டை வேகாததால், சந்தேகம் அடைந்தனர்.

பின்னர் அந்த முட்டையை எடுத்து உடைத்துப் பார்த்தால், அதில் ஒன்றுமே இல்லை. வெறும் பிளாஸ்டிக் முட்டை போல் இருந்துள்ளது. இதையடுத்து அவர்கள் போலிசில் புகார் கொடுத்துள்ளனர். அந்த வியாபாரியை வலைபோட்டு தேடி வருகின்றனர் வரிகுண்டபாடு போலிசார்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு

திருச்சூர்: இந்தியாவில் கொவிட்-19 தொற்றுப் பாதிப்பு சரிந்து வரும் நிலையில் கேரளாவில் மட்டும் பாதிப்பு குறைந்தபாடில்லை. கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. அப்போது தடுப்பூசி போட்டுக்கொண்ட மாணவர்கள் சிலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 60 மாணவர்களுக்குத் தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதில் 39 மாணவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். அவர்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது மருத்துவ நிபுணர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் மேலும் இருவருக்கு ஸிக்கா தொற்று பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இவர்களையும் சேர்த்து இதுவரை அங்கு 37 பேர் ஸிக்கா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.