மும்பை: ஆபாசப் படங்கள் தயாரித்து செயலி மூலம் விற்பனை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில் வர்த்தகரும் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ரா உள்ளிட்ட 11 பேரை மும்பை போலிசார் கைது செய்துள்ளனர்.
ஆபாசப் படங்களைத் தயாரித்து செயலிகள் வெளியிட்டதில் ராஜ் குந்த்ரா முக்கியக் குற்றவாளி எனத் தெரியவந்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ஒரு பெண் மும்பை காவல் ஆணையர் அலுவலகத்தை அணுகி, ராஜ்குந்த்ரா மீது புகார் அளித்தார்.
அந்தப் புகாரில், இணையத் தொடர் தயாரிக்கப் போவதாகக் கூறி ஏராளமான பெண்களை நடிக்க அழைத்து, அவர்களைப் படிப்படியாக பாலியல் படங்களில் நடிக்க ராஜ் குந்த்ரா கட்டாயப்படுத்தியதாகக் கூறப்பட்டது.
இந்தப் புகாரை அடுத்து, அண்மையில் மும்பையின் மேற்குப் பகுதியில் உள்ள மாலத், மாத் பகுதியில் ஒரு பண்ணை வீட்டில் பாலியல் படங்கள் எடுக்கப்படுவதாக வந்த புகாரையடுத்து, அங்கு அதிரடிச் சோதனை நடத்திய போலிசார், இயக்குநர் ரோவா கான், புகைப்படக்கலைஞர் மோனு சர்மா, இயக்குநர் பிரதிபா நலாவாடே, இரு நடிகர்கள் என ஐந்து பேரைக் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தையடுத்து ராஜ் குந்த்ரா முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர்.
ராஜ் குந்த்ரா மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம், பெண்களை தவறாகச் சித்திரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை மும்பை காவல் ஆணையர் ஹேமந்த் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ரா தம்பதிகள் 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு வையான் ராஜ் என்ற மகனும், ஷமிஷா என்ற மகளும் உள்ளனர்.

