செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
87038c57-438d-445b-8c26-29376a0c8691
-

2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒத்திவைப்பு

புதுடெல்லி: கொரோனா தொற்று காரணமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021 ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021ல் பிற்படுத்தப்பட் டோருக்கான சாதி வாரி விவரங்கள் சேர்க்கப்பட்டு உள்ளனவா என்று மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த இணை அமைச்சர், மார்ச் 2019ல் வெளியிடப்பட்ட அரசிதழின்படி, மத்திய அமைச்சு களுடன் கலந்தாலோசித்து, மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021 நடத்தப்பட்டு வருவதாகவும் கொரோனா தொற்றினால் இந்த நடவடிக்கைகள் இப்போது ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

ராஜஸ்தானில் நிலநடுக்கம்

பிகேனர்: ராஜஸ்தான் மாநிலம் பிகேனர் என்ற பகுதியில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்தபடி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவான அந்த நிலநடுக்கத்தால், வீடுகள் லேசாக குலுங்கியதாக தகவல்கள் வெளியாயின.

ரூ.64,000 கோடி செலவிட்ட மக்கள்

புதுடெல்லி: இந்திய மக்கள் கொரோனா தொற்று சிகிச்சைக்காக ஜூன் வரையிலான கடந்த 14 மாதங்களில் 64,000 கோடி ரூபாயைச் செலவு செய்து உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சுய தொழில் பார்ப்பவர்கள், சராசரியாக தங்களது ஏழு மாத ஊதியத்தைச் செலவிட்டுள்ளனர். சாதாரண தொழிலாளர்கள் தங்களது 15 மாத சம்பளத்தைச் செலவிட்டுள்ளனர். ஒரு மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொள்ள சுயதொழில் பார்ப்பவர்கள் வருவாயில் 15% அளவிற்குச் செலவிட்டுள்ள நிலையில், சாதாரண தொழிலாளர்கள் 43% அளவுக்குச் செலவிட்டிருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஓராண்டாக முடங்கிய குடும்பம்

கோதாவரி: ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜோலு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சீனுவாசுலு என்பவரின் குடும்பத்தினர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா பரவத் தொடங்கியது முதல் கிருமிக்குப் பயந்து வீட்டிலேயே தங்கிவிட்டனர்.

ஆறு பேர் உள்ள அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பையன் மட்டும் வாரத்துக்கு ஒரு முறை வெளியே வந்து தேவையான பொருட்களை அவர்களது ஊரிலேயே வாங்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்று விடுவான். இந்நிலையில் பட்டா கொடுக்கப் போன அதிகாரிகள் நிலைமையை அறிந்து குடும்பத்தினரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.