கோல்கத்தா: கைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத் தகவல், தொழில்நுட்ப நிலைக்குழு வரும் 28ஆம் தேதி விசாரணை நடத்த உள்ளது.
இதையடுத்து மத்திய உள்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரிகளுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
குடிமக்களின் தகவல் பாதுகாப்பு, தனியுரிமை குறித்து நிலைக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புள்ள பிரச்சினை என்பதால் மத்திய அரசு உரிய பதில் அளிக்க வேண்டியது அவசியம் என இக்குழுவின் தலைவரான காங்கிரஸ் எம்பி சசிதரூர் வலியுறுத்தி உள்ளார்.
இதற்கிடையே ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சிகளும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக அணிதிரள வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான அவர், தம்மால் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேச முடியவில்லை என்றும் தமது தொலைபேசியும் ஒட்டுக் கேட்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், நாட்டையும் ஜனநாயகத்தையும் உச்ச நீதிமன்றம்தான் காப்பாற்ற வேண்டும் என்றார்.
"ஒரு குழு அமைத்து இவ்விவகாரத்தில் ஆழ்ந்த விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும். இந்த நாட்டை நீதித்துறை மட்டுமே காப்பாற்ற முடியும்.
"பிரதமர் மோடி, இதை தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக் கொண்டாலும் எனக்குக் கவலையில்லை. நீங்களும் (மோடி), உள்துறை அமைச்சரும் சேர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்களை உளவு பார்க்க நாட்டின் அமைப்புகளைப் பயன்படுத்துகிறீர்கள். மக்களின் வரிப்பணத்தை நீங்கள் உளவு மென்பொருள் வாங்க செலவு செய்து கொண்டிருக்கிறீர்கள்," என்று முதல்வர் மம்தா கூறியதாக தினத்தந்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

