மும்பை: பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா மீது காவல்துறையின் பிடி இறுகி வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவர் ஏராளமான ஆபாசக் காணொளிகளைத் தயாரித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் அளித்த புகாரின் பேரில் மும்பை போலிசார் அவரைக் கைது செய்துள்ளனர்.
லண்டனைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆபாசக் காணொளிகளை விநியோகிப்பதற்கு என்றே தனி செயலி ஒன்றை உருவாக்கி உள்ளது. அச்செயலியை இணையம் வழி பதிவிறக்கம் செய்பவர்கள் குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்தினால், ஆபாசக் காணொளிகளைப் பார்க்க முடியும்.
இத்தகைய செயலிகளுக்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவேதான் தமது உறவினர் ஒருவரது பெயரில் லண்டன் நிறுவனத்தை ராஜ் குந்த்ராவே நடத்தி வந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், லண்டன் நிறுவனத்துடனான ஒப்பந்தப்படி மும்பை உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆபாசக் காணொளிகளைப் படமாக்கி விற்றுள்ளார்.
இந்நிலையில், சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி தங்களை ஏமாற்றி ஆபாசப் படங்களில் நடிக்க வைத்ததாக மும்பை பெண்கள் சிலர் போலிசில் அளித்த புகாரின் பேரில் ராஜ் குந்த்ரா உள்ளிட்ட 11 பேர் கைதாகி உள்ளனர்.

