புதுடெல்லி: பல வாரங்களாக நீடிக்கும் ஊரடங்கு, கடும் கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்கு மத்தியிலும் கேரளாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
நேற்று முன்தினம் அங்கு புதிதாக 17,481 பேருக்கு கொரோனா கிருமி தொற்றியது; மேலும் 105 பேர் உயிரிழந்துவிட்டனர். பலியானோர் மொத்த எண்ணிக்கை 15,617 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே மகாராஷ்டிராவில் மேலும் 8,159 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் மேலும் 165 பேர் மரணமடைந்தனர். உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 130,918 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று முன்தினம் 41,383 பேருக்கு புதிதாக கிருமி தொற்றியுள்ளது. 507 பேர் பலியாகி உள்ளனர். புதிய தொற்று பாதிப்புகளில் கிட்டத்தட்ட 60 விழுக்காடு கேரளாவிலும் மகாராஷ்டிராவிலும்தான் பதிவாகி வருவதை நிபுணர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

