செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
7e0785ce-5ec4-4e0f-9f47-19c23c53434d
-

ஏடிஎம் மையத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்த்து கொள்ளை

மும்பை: ஏடிஎம் மையத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்து, அதன் பின்னர் அங்கிருந்த இயந்திரத்தை உடைத்து 30 லட்சம் ரூபாயைக் கொள்ளை அடித்துச் சென்ற இருவருக்கு மகாராஷ்டிர மாநில போலிசார் வலைவீசி உள்ளனர். புனே நகருக்கு அருகே உள்ள பாம்பொலி என்ற பகுதியில் வங்கி ஏடிஎம் உள்ளது. நேற்று முன்தினம் அங்கு வந்த இருவர், கையோடு கொண்டு வந்த சில வெடிபொருள்களைப் பயன்படுத்தி அம்மையத்தைத் தகர்த்தனர். பின்னர் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களில் பதிவான காட்சிகளைப் பார்வையிட்டு போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை: மகாராஷ்டிராவிற்குச் சிவப்பு எச்சரிக்கை

புதுடெல்லி: வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்றும் இதன் எதிரொலியாக தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்பே கணிக்கப்பட்டதைவிட ஒரு நாள் முன்கூட்டியே இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்று அம்மையம் கூறியுள்ளது. ஏற்கெனவே பெருமழையால் மும்பை மாநகரம் பலத்த சேதங்களையும் பாதிப்புகளையும் சந்தித்துள்ள நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மீண்டும் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியின் சில பகுதிகளிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிகிச்சைக்கு ரூ.16.5 கோடி திரண்ட நிலையில் குழந்தை உயிரிழப்பு

திருவனந்தபுரம்: முதுகெலும்பு தசைநார் சிதைவு என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருந்த கேரள குழந்தையின் சிகிச்சைக்கு ரூ.16.5 கோடி நன்கொடை திரண்ட நிலையில், குழந்தை திடீரென இறந்தது. இந்த நோய் பாதித்தால் கை, கால்கள் செயலிழந்து நடமாட முடியாத நிலை ஏற்படும். இந்நோய்க்கான மருந்தின் விலை ரூ.18 கோடி. குழந்தையின் பெற்றோர் விடுத்த கண்ணீர் வேண்டுகோளை அடுத்து சில நாள்களில் பல கோடி திரண்டது. இன்னும் ஒன்றரைக் கோடி மட்டுமே தேவை என்பதால் பெற்றோர் நம்பிக்கையுடன் இருந்தனர். இந்நிலையில், குழந்தையின் உடல்நிலை நேற்று முன்தினம் திடீரென மோசமடைந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

எல்லையில் இனிப்புகள் பரிமாற்றம்

ஸ்ரீநகர்: ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு எல்லைப் பகுதியில் உள்ள இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளைப் பரிமாறிக்கொண்டனர். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்த இனிப்பு பரிமாற்றம் நடந்துள்ளது. வாகா எல்லை, ராஜஸ்தான் எல்லை உள்ளிட்ட இடங்களில் இரு தரப்பு வீரர்களும் இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.