ஸ்ரீநகர்: துப்பாக்கி வைத்திருப்பதற்கான உரிமங்களைக் கள்ளத்தனமாக விற்றது தொடர்பில், மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஷாகித் இக்பால் சௌத்ரியின் வீடு உட்பட ஜம்மு-காஷ்மீரிலும் டெல்லியிலும் 40 இடங்களில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) நேற்று அதிரடிச் சோதனைகளை நடத்தியது.
இப்போது ஜம்மு-காஷ்மீர் பழங்குடியினர் விவகாரத் துறைச் செயலாளராக இருந்து வருகிறார் திரு சௌத்ரி. அவர் கத்துவா, ரியாசி, ரஜோரி, உதம்பூர் ஆகிய மாவட்டங்களில் உதவி ஆணையராகப் பணியாற்றியபோது, போலிப் பெயர்களில் ஆயிரக்கணக்கில் துப்பாக்கி உரிமங்களை விற்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பில் குறைந்தது எட்டு முன்னாள் உதவி ஆணையர்களிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஜம்மு-காஷ்மீரில் மட்டும் இருநூறாயிரத்திற்கும் மேற்பட்ட துப்பாக்கி உரிமங்கள் கள்ளத்தனமாக விற்கப்பட்டுள்ளன. இதுவே, இந்தியாவின் ஆகப் பெரிய துப்பாக்கி உரிம மோசடிக் கும்பலாக நம்பப்படுகிறது.
இதே காரணத்திற்காக, கடந்த ஆண்டிலும் ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் ரஞ்சன், ஹுசேன் ரஃபிக்கி ஆகிய இருவரை சிபிஐ கைது செய்தது. குப்வாரா மாவட்டத்தில் உதவி ஆணையர்களாகப் பணிபுரிந்தபோது அவ்விருவரும் கள்ளத்தனமாக துப்பாக்கி உரிமங்களை விற்றதாகக் கூறப்பட்டது.
கடந்த 2017ஆம் ஆண்டு ராஜஸ்தான் பயங்கரவாதத் தடுப்புப் படையினர், இந்த மோசடியைக் கண்டுபிடித்தனர். அப்போது, ராஜீவ் ரஞ்சனின் சகோதரனும் இடைத் தரகர்களாகச் செயல்பட்ட பலரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அரசு அதிகாரிகளுக்கும் இதில் தொடர்பிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, வழக்கு சிபிஐவசம் ஒப்படைக்கப்பட்டது.

