கோல்கத்தா: சவக்கிடங்கு உதவியாளர் பணிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பொறியாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
மேலும், 2,700க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் இந்த வேலையில் சேர விருப்பம் தெரிவித்துள்ளதாக மேற்கு வங்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கோல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் சவக்கிடங்கு தடயவியல் பரிசோதனைக் கூடத்தில் ஆறு உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியில் சேர எட்டாம் வகுப்பு முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இதையடுத்து எட்டாயிரம் பேர் விண்ணப்பங்களை அனுப்பி இருந்தனர். இவர்களில் 2,200 பேர் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்தவர்கள். 500 பேர் முதுநிலைப் பட்டதாரிகள் ஆவர்.
சடலங்களைக் கையாளும் பணிக்கு பட்டதாரிகள், உயர்கல்வித் தகுதி படைத்தவர்கள் விண்ணப்பித்திருப்பது மேற்கு வங்க சுகாதார அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இதன் மூலம், வேலையில்லாத் திண்டாட்டத்தின் உண்மை நிலை தெரிய வருவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

