சமையல் எரிவாயு உருளை
வெடித்து ஒன்பது பேர் மரணம்
அகமதாபாத்: சமையல் எரிவாயு உருளை வெடித்துச் சிதறியதில் நான்கு குழந்தைகள் உள்பட ஒன்பது பேர் பலியாகினர். இந்த துயரச் சம்பவம் குஜராத் மாநிலத்தின் குணா மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிகழ்ந்துள்ளது. பலியான அனைவரும் மத்தியப் பிரதேசத்தில் இருந்து வந்து கூலி வேலை செய்து வந்துள்ளனர். ஒன்பது பேரும் சிறிய அறையில் ஒன்றாகத் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில், அங்கு அவர்கள் பயன்படுத்திய சமையல் எரிவாயு உருளை இரவு நேரத்தில் வெடித்துச் சிதறியது. முன்னதாக, எரிவாயு கசிவை உணர்ந்த அண்டை வீட்டுக்காரர் தகவல் தெரிவிப்பதற்காக, தொழிலாளர்கள் தங்கியிருந்த அறைக்கதவைத் தட்டியுள்ளார். அதைக் கேட்ட தொழிலாளர் ஒருவர் அறையில் உள்ள மின்விளக்கை எரியவிட்ட போது ஏற்பட்ட தீப்பொறி விபத்துக்கு காரணமானது.
தங்கக் கடத்தலுக்கு உதவி: மூன்று சுங்கத்துறை ஆய்வாளர்கள் பணிநீக்கம்
திருவனந்தபுரம்: தங்கக் கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் கேரளாவில் சுங்க இலாகாவைச் சேர்ந்த மூன்று ஆய்வாளர்கள் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மூவரும் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் தங்கத்தை விமான நிலையத்தில் இருந்து வெளியே கொண்டு செல்ல உதவியதாகத் தெரிகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் கண்ணூர் விமான நிலையத்தில் 4.5 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது. இது தொடர்பாக மூன்று பேரைக் கைது செய்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மூன்று சுங்க இலாகா ஆய்வாளர்களுக்கும் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மூவரும் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த இந்தியா
ஸ்ரீநகர்: ஆளில்லா சிறிய ரக விமானங்கள் மூலம் ஜம்மு காஷ்மீரில் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் இந்தியா, பாகிஸ்தான் இடையே ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பயங்கரவாத செயல்களை முறியடிப்பது தொடர்பில் இரு நாடுகளுக்கு இடையே உடனுக்குடன் தகவல்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இச்சமயம் எல்லையில் கண்டுபிடிக்கப்பட்ட ரகசிய சுரங்கங்கள் குறித்து இந்திய தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டது.
மேற்கு வங்கத்தில் பாஜக ஆதரவாளர் கொலை: மேலும் இருவர் கைது
கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்த லுக்குப் பிறகான வன்முறைச் சம்பவங்களின்போது பாஜக ஆதரவாளர் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பில் இரண்டு பேர் கைதாகி உள்ளனர். அபிஜித் சர்கார் என்ற அந்த ஆடவரை தேர்தல் முடிவுகள் வெளியான சிறிது நேரத்தில் ஒரு குழு கண்மூடித்தனமாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கோல்கத்தா உயர் நீதிமன்ற அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான புகார்களை மேற்கு வங்க அரசு சரிவர விசாரிக்கத் தவறிவிட்டதாக நீதிபதிகள் விமர்சித்தனர். இதையடுத்து போலிசார் தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் இருவரை கைது செய்துள்ளனர்.
'பொறுப்புகளை நிறைவேற்றியுள்ளேன்'
பெங்களூரு: பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தமது பொறுப்புகளை நிறைவேற்றி இருப்பதாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். 78 வயதான அவர், முதல்வர் பதவியில் இருந்து இன்று விலக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்கள், கொரோனா பெருந்தொற்று ஆகியவற்றை தமது அரசு திறம்பட சமாளித்ததாகவும் அவர் கூறியுள்ளார். பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் கர்நாடக பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

