பெங்களூரு: கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக எடியூரப்பா (படம்) அறிவித்துள்ளார். நேற்று கர்நாடக மாநில பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்ற அவர், சரியாக இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பதவி விலகி உள்ளார்.
கர்நாடக மாநில பாஜகவில் கடந்த சில மாதங்களாக உட்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக சிலர் அணிவகுத்தனர். மேலும், அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சிலரும் கூட அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து கட்சித் தலைமை அவரை பதவி விலக உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் தமது செயல்பாட்டில் கட்சித் தலைமைக்கு முழு திருப்தி இருப்பதால் தாம் பதவி விலக வேண்டிய அவசியம் எழவில்லை என்றும் அதேசமயம் கட்சித் தலைமை உத்தரவிட்டால் பதவி விலகத் தயார் என்றும் இரு தினங்களுக்கு முன்பு அறிவித்தார் முதல்வர் எடியூரப்பா.
இந்நிலையில் நேற்று முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.
"கர்நாடகாவில் எனது அரசு பதவியேற்று இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. முதல்வர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். ஆளுநரைச் சந்தித்து எனது பதவி விலகல் கடிதத்தை வழங்க உள்ளேன்.
"அதன் பிறகு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை பாஜக தலைமை முடிவு செய்யும். கட்சிக்காக விசுவாசத்துடன் தொடர்ந்து பணியாற்றுவேன்," என்று கண்ணீர்மல்க தெரிவித்தார் எடியூரப்பா.
இதையடுத்து கர்நாடகாவின் புதிய முதல்வர் யார் என்பது குறித்து பாஜக மேலிடம் உடனடியாக அறிவிப்பு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

