ரூ.4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை கடத்த முயன்ற நால்வர் கைது
திருவனந்தபுரம்: பல கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை சொகுசுக் காரில் கடத்திய ஐந்து பேரை கேரள காவல்துறை கைது செய்தது. நேற்று முன்தினம் அந்த ஐந்து பேரும் ஆந்திராவில் இருந்து, தமிழகம் வழியாக கேரளாவுக்கு 200 கிலோ கஞ்சாவைக் கடத்த முயன்றனர். அதன் அனைத்துலக சந்தை மதிப்பு நான்கு கோடி ரூபாய் ஆகும். கேரளாவின் திருச்சூர் மாவட்ட எல்லையில் உள்ள நெடுஞ்சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலிசார் கடத்தல்காரர்கள் வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.
ருத்ரேஸ்வரா கோவில் உலக பாரம்பரிய சின்னமானது: யுனெஸ்கோ அறிவிப்பு
ஹைதராபாத்: உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ருத்ரேஸ்வரா கோவில் (படம்) தேர்வு செய்யப்பட்டுள்ளதாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மகிழ்ச்சியளிப்பதாகப் பிரதமர் மோடி கூறியுள்ளார். நூற்றாண்டு பழமை வாய்ந்த ருத்ரேஸ்வரா கோவில் தெலுங்கானாவின் முளுகு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தெலுங்கானாவின் 'பெரிய காகதியா' வம்சத்தின் சிறப்பான கட்டடக்கலைக்குச் சான்றாக உள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இரு கைகளும் இல்லை: காலில் தடுப்பூசி போட்டுக்கொண்ட இளையர்
திருவனந்தபுரம்: பாலக்காடு பகுதியைச் சேர்ந்த பிரணவ் (படம்) என்ற 22 வயது இளையருக்கு இரு கைகளும் இல்லை. இதையடுத்து அவர் தனது காலில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். மருத்துவர்களிடம் அனுமதி பெற்ற பிறகு அவருக்குத் தடுப்பூசி போடப்பட்டது.
டெல்லி: ஆகஸ்ட் 15ல் டிராக்டர் பேரணி
புதுடெல்லி: ஆகஸ்ட் 15ஆம் தேதி டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்த இருப்பதாக விவசாய சங்கத் தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார். இது ஒன்றும் மோசமான செயல் அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் போராடி வருகின்றனர். "தேசிய கொடிகள் ஏற்றப்பட்ட டிராக்டர்களில் அணிவகுத்துச் செல்வது தேசியத்தை வளர்த்தெடுக்கும்," என்று ராகேஷ் திகாயத் கூறியுள்ளார். கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் நடத்திய டிராக்டர் பேரணியின்போது வன்முறை வெடித்தது. எனவே, மீண்டும் அத்தகைய பேரணியை காவல்துறை அனுமதிக்குமா எனத் தெரியவில்லை.

