நெடுஞ்சாலை மதுக்கடைகளை அகற்ற உரிய நடவடிக்கை

1 mins read
8cac2655-796f-471d-94a7-87995df5198d
-

புதுடெல்லி: நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்ற மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மத்திய போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி (படம்) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக மாநிலங்களவையில் தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ பதிலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2016, 2017ஆம் ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் மதுக்கடைகள் தொடர்பாக முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி 500 மீட்டர் தூரத்தில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் 20 ஆயிரம் மக்கள் தொகை உள்ள பகுதிகளில் நெடுஞ்சாலையில் இருந்து 220 மீட்டருக்குள் மதுக்கடைகள் அமைக்க உரிமம் வழங்கக்கூடாது என்றும் உச்ச நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த உத்தரவுகளைச் செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை நெடுஞ்சாலை அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது என்று அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

மேலும், அச்சு, மின்னணு ஊடகங்கள் மூலம் மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.