செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
e2b2e88e-bd02-4ada-be47-2ac37191f63a
-

ரெம்டெசிவிர் மருந்தை கடத்த முயன்ற தான்சானியா நாட்டுப் பெண் கைது

புதுடெல்லி: தான்சானியா நாட்டுக்கு கடத்தப்பட இருந்த ரெம்டெசிவிர் மருந்து டெல்லி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அந்நாட்டைச் சேர்ந்த அய்மன் குல்சன்ராசா சையது என்ற பெண் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 70 குப்பி ரெம்டெசிவிர் மருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதன் சந்தை மதிப்பு ரூ.3.5 லட்சம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒட்டுக்கேட்பு: உச்ச நீதிமன்றத்தில் மனு

புதுடெல்லி: கைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக வெளியான தகவல் நாடு முழுவதும் கண்டனக் குரல்களை எழுப்பி உள்ள நிலையில், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தக்கோரி பிரபல 'தி இந்து' ஊடகத்தைச் சேர்ந்த இந்து என்.ராம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். 'ஏசியாநெட்' ஊடக நிறுவனர் சசிகுமாரும் அவருடன் இணைந்து மனுத்தாக்கல் செய்துள்ளார். இருவரும் ஒட்டுக்கேட்பு நடவடிக்கை குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

லக்னோவை குறிவைக்கும் விவசாயிகள்

லக்னோ: வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை விவசாயிகள் போராட்டம் ஓயாது என விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் கூறியுள்ளார். முதலில் டெல்லியை போராட்டக்களமாக அறிவித்து அங்கு தொடர் முற்றுகைப் போராட்டங்களை நடத்தி வந்த விவசாயிகள், அடுத்து உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவை போராட்டக்களமாக அறிவிக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். "லக்னோவுக்கு செல்லும் அனைத்து சாலைகளையும் முடக்குவோம். உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு முன்பு, அம்மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் விவசாயிகள் போராட்டம் தொடங்கப்படும் என்றும் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் ராகேஷ் திகாயத் கூறினார்.

மல்லையா திவாலானவர் என லண்டன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

லண்டன்: வங்கிகள் கூட்டமைப்பு தொடுத்த வழக்கில் இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையாவை திவால் ஆனவர் என லண்டன் நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து அவர் வங்கிகளில் பெற்றுள்ள கடன்களை திரும்பப்பெற முடியும் என அக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. லண்டன் உயர் நீதிமன்ற தீர்ப்பினால் விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்க இயலும் என்று நிபுணர்கள் கூறியுள்ள நிலையில், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கிகள் உட்பட 13 நிதி நிறுவனங்கள் ஒருங்கிணைந்து விஜய் மல்லையாவுக்கு எதிரான வழக்கை நடத்தி வருகின்றன.

பிச்சை எடுக்க தடை விதிக்க உச்ச நீதிமன்றம் திட்டவட்ட மறுப்பு

புதுடெல்லி: பிச்சை எடுப்பதற்கு தடைவிதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டெல்லியில் பிச்சை எடுப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் பிச்சை எடுக்க தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரி குஷ்கர்லா என்பவர் வழக்கு தொடுத்துள்ளார். அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள் அவ்வாறு தடைவிதிக்க இயலாது என்று தெரிவித்த னர். பிச்சையெடுக்கும் நிலைக்கு வறுமை தள்ளும்போது வசதி யானவர்களின் கண்ணோட்டத்தில் இருந்து இப்பிரச்சினையை அணுக முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இது ஒரு சமூகப் பிரச்சினை என்றும் அரசு சமூக நலக் கொள்கைகளை வகுத்து இதற்குத் தீர்வு காண வேண்டும் என்றும் கூறினர்.

சிகிச்சைக்கு திரண்ட ரூ.46.7 கோடி

திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த ஆரீஃப் என்பவரின் ஒன்றரை வயது மகன் முகம்மதுவுக்கு முதுகெலும்பு தசை நார் சிதைவு நோய் பாதிப்பு உள்ளது. இந்த நோய்க்கு ஒரே ஒரு மருந்துதான் உள்ளது. இதன் விலை ரூ.18 கோடியாகும். அதை வாங்க முடியாமல் தவித்த ஆரீஃப், சமூக வலைத்தளங்கள் மூலம் உதவி கோரினார். இதையடுத்து சில தினங்களில் ரூ.46.7 கோடி திரண்டுள்ளது. இவரது மகளான 15 வயது அப்ராவுக்கும் இதே நோய் பாதிப்பு உள்ளது. எனவே இரு குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிப்பதுடன், மீதமுள்ள தொகையை இதே போல் பாதிக்கப்பட்டுள்ள மற்ற குழந்தைக ளுக்கு அளிக்கப் போவதாக ஆரீஃப் தெரிவித்துள்ளார்.

அசாம், மிசோரம் எல்லையில் மோதல்

கவுகாத்தி: அசாம், மிசோரம் மாநிலங்களுக்கு இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை நிலவி வரும் நிலையில், நேற்று முன்தினம் இருதரப்புக்கும் இடையே திடீர் மோதல் மூண்டது. வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைக்கச் சென்ற அசாம் போலிசார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஆறு போலிசார் உயிரிழந்தனர். இம்மோதல் தொடர்பாக இரு மாநில முதல்வர் களும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டியுள்ளனர். இரு மாநில எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.