செய்திக்கொத்து

2 mins read
7e647834-4f89-425b-9b57-6b781f7ac216
-

மத்திய அரசு: காஷ்மீரில் இயல்புநிலை திரும்பினால் மாநிலத் தகுதி

புதுடெல்லி: ஜம்மு, காஷ்மீருக்கு மீண்டும் எப்போது மாநிலத் தகுதி வழங்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அங்கு இயல்பு நிலை முழுமையாகத் திரும்பிய பிறகு மாநிலத் தகுதி வழங்கப்படும் என்று மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் பயங்கரவாதச் சம்பவங்கள் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட மம்தா அழைப்பு

புதுடெல்லி: மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில்தான் பேசவேண்டும் என்றும் தேநீர்க் கடைகளில் பேச முடியாது என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவைத் தோற்கடிக்க எல்லோரும் இணைய வேண்டும் என வலியுறுத்தினார். "நாடாளுமன்றம் முடங்கியுள்ளது. எனவே மக்களின் நல னுக்காக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண் டிய அவசியம் ஏற்பட்டுள்ளது," என்றார் முதல்வர் மம்தா.

பசவராஜ்: அணை கட்டுவது உறுதி

பெங்களூரு: மேகதாதுவில் புதிய அணை கட்டுவது உறுதி என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். அணை கட்டுவது கர்நாடகாவின் உரிமை என்றும் இம்முடிவில் இருந்து பின்வாங்க வாய்ப்பே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அணை கட்ட சட்ட ரீதியாக கர்நாடகாவுக்கு சாதகமான அம்சங்கள் உள்ளன என்றும் முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளில் 3.75 மில்லியன் வீடுகள் கட்ட மத்திய அரசு அனுமதி

புதுடெல்லி: பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத் தின் கீழ் 3.75 மில்லியன் வீடுகளைக் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய வீட்டு வசதித்துறை அமைச்சர் கவுசல் கிஷோர் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் 2.89 மில்லியன் வீடுகள் கட்டப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், மீதமுள்ள வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன எனக் கூறியுள்ளார்.

ஐந்து மாநிலத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை

புதுடெல்லி: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. அப்போது தேர்தல் நடைபெற உள்ள பஞ்சாப், உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் வாக்காளர் பட்டியலை உறுதி செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.