புதுடெல்லி: இந்தியாவில் இருந்து பல்வேறு காலகட்டங்களில் கடத்தப்பட்டு, பின்னர் ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்டுள்ள சிலைகளை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க அந்நாடு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் சோழர்கால சிலைகள் உட்பட பல கோடி ரூபாய் மதிப்புள்ள 14 கலைப் பொருள்கள் மிக விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் இருந்து நிறைய சிலைகள் திருடப்பட்டுள்ளன. பின்னர் அவை பெரும் தொகைக்கு வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு விற்கப்பட்டுள்ளன.
சிலைக் கடத்தல் மன்னன் என்று குறிப்பிடப்படும் சுபாஷ் கபூர், வில்லியம் மோல்ப் ஆகிய இருவரும் நிறைய சிலைகளைக் கடத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியாவுக்குச் சொந்தமான இத்தகைய சிலைகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
இந்நிலையில் சுபாஷ் கபூரிடம் இருந்து வாங்கப்பட்ட சோழர்கால சிலைகள் உட்பட 14 கலைப் பொருள்களை இந்தியாவிடம் ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.
இவை அனைத்தும் அந்நாட்டின் தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் முறைகேடான வழிகளில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை அறிந்த ஆஸ்திரேலிய அரசு, அச்சிலைகளை அங்கிருந்து அகற்றுவதாக முடிவு செய்துள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையே உள்ள உறவின் அடிப்படையில், கலாசார ரீதியான பொருள்களைத் திருப்பிக் கொடுப்பதில் பெருமைப்படுவதாக அருங்காட்சியக இயக்குநர் நிக் மிட்செவிச் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய அரசின் இந்த முடிவை வரவேற்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட திருஞானசம்பந்தர் சிலைகள் இரண்டும் கூட ஒப்படைக்கப்படும் பொருள்களின் பட்டியலில் உள்ளன.