திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் தாயும் மகனும் சேர்ந்து பிளஸ்-1 தேர்வு எழுதியுள்ளனர்.
எர்ணாகுளம் அருகே காக்கநாடு பகுதியில் வசிக்கும் 59 வயது சைனா பாபீவி அழகுக் கலை நிபுணராக உள்ளார்.
இவருக்கு படிப்பின் மீது தீவிர ஆர்வம் இருந்தபோதிலும் அவரால் பள்ளிக் கல்வியை முடிக்க முடிய வில்லை. இவரது 27 வயது மகன் இர்ஃபான் தற்போது அழகு கலை நிறுவனம் நடத்தி வருகிறார்.
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிப் படிப்புத் தேர்வில் இர்ஃபான் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் இருவரும் எப்படியாவது பிளஸ்-1 தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும் என்று முடிவு செய்தனர். இதனால் இருவரும் வீட்டில் பாடங்களை படித்து வந்தனர். அப்பகுதியில் உள்ள கற்றல் நிலையத்தில் சேர்ந்து பிளஸ்-1 படித்து தேர்வு எழுத பயிற்சி பெற்றனர். இந்த நிலையில் இருவரும் எர்ணாகுளத்தில் உள்ள அரசு பள்ளியில் தேர்வு எழுதினர்.
தாயும் மகனும் ஒரே பள்ளியில் தேர்வு எழுதியது அங்கு வந்திருந்த பலரை வியப்பில் ஆழ்த்தியது. "குடும்பத்திற்காக பள்ளிப் படிப்பை முடிக்க முடியாமல் போனதால் வருத்தமாக இருந்தது. இப்போது தேர்வு எழுதியதால் அந்த வருத்தம் தீர்ந்துள்ளது. தேர்வில் நானும் எனது மகனும் நிச்சயம் வெற்றி பெறுவோம். நான் படிப்பதற்கு எனது கணவரும் குடும்பத்தினரும் முழு ஆதரவு தந்தனர்," என்று சைனா பாபீவி கூறியுள்ளார்.

