செய்திக்கொத்து

2 mins read
281ca15e-b32c-4834-9f32-ed003c833102
-

புல்வாமா தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: கடந்த 2019ஆம் ஆண்டு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட முகமது இஸ்மல் அல்வியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். புல்வாமாவில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் இந்திய பாதுகாப்புப் படை வீரர்கள் 44 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காஷ்மீரில் முகமது இஸ்மல் கொல்லப்பட்டதை பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் உறுதி செய்தார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி: ரூ.133 கோடி விரயம்

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் நேரம் வீணாகிப்போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த இரு வாரங்களில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் நடவடிக்கைகள் இரு அவைகளிலும் மொத்தம் 107 மணி நேரம் நடந்திருக்க வேண்டும். ஆனால் அமளியாலும் அடிக்கடி அவை ஒத்தி வைக்கப்பட்டதாலும் வெறும் 11 மணி நேரத்துக்கு மட்டுமே நாடாளுமன்றம் ஆக்கபூர்வமாகச் செயல்பட்டுள்ளது என்றும் 89 மணி நேரம் வீணாகிவிட்டது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. இதனால் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்காக செலவிடப்படும் மக்களின் வரிப்பணம் ரூ.133 கோடி விரயமாகி உள்ளதாகவும் அரசு சுட்டிக்காட்டி உள்ளது.

அசாம் முதல்வர் மீது வழக்குப் பதிவு

கவுகாத்தி: அசாம் மாநில முதல்வர் மீது மிசோரம் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அண்மையில் இரு மாநிலங்களின் எல்லைப் பகுதியில் நிகழ்ந்த மோதலின்போது அசாம் போலிசார் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்தா, அம்மாநில காவல்துறை உயரதிகாரிகள் நால்வர் உட்பட இருநூறு பேர் மீது மிசோரம் போலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஒட்டுக்கேட்பு: உச்ச நீதிமன்றத்தில் வரும் 5ஆம் தேதி விசாரணை

புதுடெல்லி: தொலைபேசி ஒட்டுக்கேட்பு தொடர்பாக மூத்த ஊடகவியலாளர்கள் என்.ராம், சசிகுமார் ஆகிய இருவரும் தொடுத்துள்ள வழக்கு தொடர்பான விசாரணை வரும் 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி ரமணாவை உள்ளடக்கிய அமர்வு இந்த மனுவை விசாரிக்கும். காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல், வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களும் அன்றைய தினம் விசாரணைக்கு வர உள்ளன.