செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
817d1706-f89d-405d-99b1-60e611d27a57
-

225 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை

புதுடெல்லி: நாடு முழுவதும் 225 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதாக மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான புள்ளி விவரங்கள் அடங்கிய அறிக்கையை அந்த அமைச்சு மக்களவையில் தாக்கல் செய்துள்ளது. இதுவரை 225 மாவட்டங்கள், 1,597 வட்டங்கள், 756 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், குடிநீர் பற்றாக்குறை உள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. "நிலத்தடி நீரை அதிக அளவில் எடுப்பது, நகரங்களில் மக்கள் பெருக்கம், கிடைக்கும் நீரை திறமையின்றி பயன்படுத்துதல் ஆகியவையே நகரங்களில் குடிநீர் பற்றாக்குறைக்கு காரணங்கள் ஆகும். 'அம்ருத்' என்ற திட்டத்தின்கீழ், நகர்ப்புறங்களில் சுமார் பத்து மில்லியன் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மழைநீர் சேகரிப்பு திட்டத்துக்கும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது," என அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.

எடியூரப்பா: கூடுதல் வசதிகள் வேண்டாம்

பெங்களூரு: முன்னாள் முதல்வருக்குரிய வசதிகள் மட்டுமே தமக்குப் போதும் என எடியூரப்பா கூறியுள்ளார். கூடுதல் சலுகைகள் எதுவும் தமக்குத் தேவையில்லை என கர்நாடக முன்னாள் முதல்வரான அவர், மாநில அரசுக்கு கடிதம் வழி தெரிவித்துள்ளார். முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக அரசு, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு மாநில அமைச்சருக்குரிய அந்தஸ்து வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும் முதல்வராக இருந்தபோது தங்கியிருந்த பெங்களூரு காவிரி இல்லத்திலேயே எடியூரப்பா தொடர்ந்து வசிக்கலாம் எனவும் அனுமதி வழங்கியுள்ளது. எனினும் இவற்றை ஏற்க இயலாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

காவல்துறையால் மக்களுக்குத் துன்பம்: தலைமை நீதிபதி வருத்தம்

புதுடெல்லி: காவல் நிலையங்களில் மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவது அதிகரித்துள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நாடு முழுவதும் காவல்துறையால் பொதுமக்களுக்கு ஏற்படும் துன்பங்கள் தொடர்வது வருத்தம் அளிப்பதாகக் குறிப்பிட்டார். "இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். சமூகத்தை சட்டம் ஆள்கிறது. இதில், வசதி படைத்தவர்களுக்கு கிடைக்கும் நீதி, எளியவர்களுக்கு கிடைப்பதில்லை. இந்த இடைவெளி நிரப்பப்பட வேண்டும். நீதி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பது ஒரு முடிவற்ற முயற்சியாக இருக்க வேண்டும்," என்றார் தலைமை நீதிபதி ரமணா.

சமூக வலைத்தளங்களில் நீதிபதிகள் குறித்து அவதூறு: ஐவர் கைது

அமராவதி: நீதிபதிகள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறாகப் பதிவிட்ட 16 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இவர்களில் ஐந்து பேர் கைதாகி உள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்களில் இதுவரை 13 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர். மூன்று பேர் வெளிநாடுகளில் உள்ளனர். 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆறு பேர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன," என்று சிபிஐ செய்தித் தொடர்பாளர் தெரிவித் துள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதி, ஆந்திர மாநில உயர் நீதிமன்ற நீதிபதி குறித்து சமூக வலைத்தளங்களில் சிலர் அவதூறாக கருத்துகளைப் பதிவிடுவதாகவும் அத்தகையவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சில தினங்களுக்கு முன் ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.