உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் விமானந்தாங்கி போர்க்கப்பல் 'விக்ராந்த்': சோதனை ஓட்டம் வெற்றி

1 mins read
4c713e5e-94f9-47cf-95c5-43fed4be4b4a
ஐந்து நாள் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ள 'ஐஎன்எஸ் விக்ராந்த்' போர்க்கப்பல். படம்: ஊடகம் -

திருவனந்தபுரம்: உள்நாட்டிலேயே முழுமையாக தயாரிக்கப்பட்ட 'ஐஎன்எஸ் விக்ராந்த்' விமானம் தாங்கி போர்க்கப்பலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

மொத்தம் ஐந்து நாள்கள் நடைபெற்ற சோதனை ஓட்டத்தின் போது கப்பலின் செயல்திறன் சிறப்பாக இருந்ததாக இந்திய கடற்படையின் செய்தித் தொடர்பாளர் விவேக் மத்வால் தெரிவித்துள்ளார்.

சோதனை ஓட்ட செயல்பாடுகள், அளவீடுகள் மனநிறைவு அளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், கப்பலின் உந்துசக்தி, மின் உற்பத்தி-விநியோகம், துணைக் கருவிகளின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பரிசோதித்து பார்க்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

"கொரோனா உள்ளிட்ட சவால்கள் இருந்த போதிலும் முதல் சோதனை இப்போது வெற்றிகரமாக முடிந்துள்ளது.

"ஏராளமானவர்களின் அர்ப்பணிப்போடு கூடிய முயற்சிக்கு இது ஒரு சான்று. நாட்டின் வரலாற்றில் இது முக்கிய மைல்கல்,'' என்றார் விவேக் மத்வால்.

இதற்கிடையே, ஐநா பாதுகாப்பு மன்றத்தின் விவாதத்துக்கு நேற்று பிரதமர் மோடி தலைமையேற்றது மற்றொரு வரலாற்றுப் பதிவாக அமைந்தது.

ஐநா பாதுகாப்பு மன்றத்தின் ஆகஸ்ட் மாதத்துக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதையடுத்து நேற்று நடைபெற்ற இந்த மன்றத்தின் ஆலோசனைக் கூட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கினார். காணொளி வசதி மூலம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ரஷ்ய அதிபர் புதின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் கடல்சார் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.