செய்திக்கொத்து

2 mins read
b6e0c6ab-8ef9-45fd-9298-c0e86169f797
-

தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்

பனாஜி: கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மேலிடப் பார்வையாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தேர்தலுக்கான ஒருங்கிணைப்புப் பணிகள், தேர்தல் உத்திகள் செயல்படுத்தப் படுவதை மேற்பார்வையிடுவார் என அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

வேளாண் ஏற்றுமதி: உலகளவில் பத்து இடங்களுக்குள் வந்த இந்தியா

புதுடெல்லி: உலகளவில் வேளாண் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் பத்து நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் முறையாக இடம்பிடித்திருப்பது பெருமை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2047ஆம் ஆண்டு நாடு நூறாவது சுதந்திர தினத்தை நிறைவு செய்யும்போது நாட்டின் நிலையை தீர்மானிப்பதில் வேளாண்மைக்கும் விவசாயிகளுக்கும் பெரும் பங்கிருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய சவால்களை சந்திக்க இதுவே சரியான நேரம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் உலகின் பணக்கார சிற்றூர்

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் உள்ள மதாபர் சிற்றூர் உலகின் பணக்கார சிற்றூர் எனக் குறிப்பிடப்படுகிறது. 7,600 வீடுகள் உள்ள இந்த ஊரைச் சேர்ந்த ஏராளமானோர் வெளி நாடுகளில் பணியாற்றுகின்றனர். எனவே, அவர்கள் அனுப்பும் பணத்தை குடும்பத்தார் சேமித்து வருகின்றனர். அதன் மூலம் அந்த ஊர் மக்களின் சேமிப்பு ஐயாயிரம் கோடி ரூபாய் உள்ளது. தனி மனித சேமிப்பு ரூ.15 லட்சமாக உள்ளது. மதாபரில் பள்ளி, கல்லூரி, ஏரி, அணை, மருத்துவ மையம், கோவில் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.

26,700 பாலியல் வன்கொடுமை வழக்குகள்

போபால்: மத்தியப் பிரதேசத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 26,700 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி உள்ளன. பாலியல் வன்கொடுமைக்கு ப் பின்னர் பாதிக்கப்பட்டவர் கொலை செய்யப்பட்டதாக 37 வழக்குகளும் சிறுமிகளைக் கடத்தியதாக 27,827 வழக்குகளும் பதிவாகி உள்ளதாக சட்டப்பேரவையில் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டு மட்டும் 633 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவுக்கு ரூ.2,555 கோடி நன்கொடை

புதுடெல்லி: தேர்தல் பத்திரம் மூலம் கடந்த 2019-20ஆம் நிதியாண்டில் பாஜகவுக்கு ரூ.2,555 கோடி நிதி கிடைத்துள்ளது. இதே காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நன்கொடை கடந்த ஆண்டை விட 17 விழுக்காடு சரிந்து ரூ.318 கோடியாக உள்ளது. தேர்தல் பத்திரம் மூலம் மொத்தம் ரூ.3,355 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. இதில் 76% பாஜகவுக்கு கிடைத்துள்ளது.

ஹாக்கிக்கு அங்கீகாரம் கோரி வழக்கு

புதுடெல்லி: இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் விஷால் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஹாக்கி தேசிய விளையாட்டு என்ற கருத்து நிலவினாலும் அது அரசாங்கத்தால் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.