மும்பை: மகாராஷ்டிரா அரசு சார்பாக ஆண்டுதோறும் தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்குபவர்களைப் பாராட்டி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விருதுக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயர் சூட்டப்படுவதாக அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
கடந்த 1984 முதல் 1989ஆம் ஆண்டு வரை இந்தியப் பிரதமராக பதவி வகித்தபோது, ராஜீவ் காந்தி தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு வித்திட்டார் என்றும் அந்தப் பங்களிப்பை நினைவூட்டும் வகையில் இந்த விருது வழங்கப்படும் எனவும் மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி பெயரில் ஏற்கெனவே மத்திய அரசு சார்பாக, விளையாட்டுத் துறையில் சாதிப்பவர்களுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டு வந்தது.
ஆனால் அண்மையில் ராஜீவ் காந்தியின் பெயர் மாற்றப்பட்டு அந்த விருதுக்கு முன்னாள் ஹாக்கி வீரர் மேஜர் தியான் சந்த் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மகாராஷ்டிரா அரசு புதிய விருதை அறிவித்து, அதற்கு ராஜீவ் காந்தி பெயரைச் சூட்டியுள்ளது.
இவ்விருது ஆண்டுதோறும் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 20ஆம் தேதி வழங்கப்படும் என்றும் நடப்பாண்டுக்கான விருது அக்டோபர் இறுதிக்குள் வழங்கப்படும் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

