பெங்களூரு: காதலை ஏற்க மறுக்கும் பெண்களைத் துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அம்மாநிலத்தில் காதலை ஏற்க மறுக்கும் இளம் பெண்கள் பலர் தாக்குதலுக்கு ஆளாகின்றனர் என்றும் சில பெண்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, "காதல் என்ற பெயரில் பெண்களைத் துன்புறுத்துவோருக்கு ஆதரவாக கேரள காவல்துறை ஒருபோதும் மென்மையாக நடந்துகொள்ளாது. காதலை ஏற்க மறுக்கும் பெண்களுக்கு எதிராக அட்டூழியங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை பாயும்," என முதல்வர் பினராயி விஜயன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
கேரளாவில் கடந்த மாதம் இளம் மருத்துவ மாணவி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்கப்படுவது தொடர்ந்து உறுதி செய்யப்படும் என்று குறிப்பிட்ட அவர், பெண்களை அச்சுறுத்துவது, பின்தொடர்வது ஆகியவை குறித்து அளிக்கப்படும் புகார்கள் மீது போலிசார் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

