பெங்களூரு: கர்நாடகா பாஜகவில் மீண்டும் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளது. பாஜக அமைச்சர்கள் இருவர் எம்எல்ஏ பதவியில் இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் புதிய முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்ற சில தினங்களிலேயே அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சிலர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் மனநிறைவு அளிக்கவில்லை என போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.
குறிப்பாக, ஆனந்த்சிங், எம்டிபி நாகராஜ் ஆகிய இருவரும் தங்களுக்குரிய துறைகள் மாற்றப்படவில்லை எனில் எம்எல்ஏ பதவியில் இருந்து விலகப்போவதாக பகிரங்கமாக அறிவித்திருப்பது பரபரப்பைக் கூட்டியுள்ளது.
ஆனந்த் சிங் உடனடியாக அரசியலில் இருந்து விலகப்போவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், ஆளுநரை நேரில் சந்தித்து தமது பதவி விலகல் கடிதத்தை அளிக்கப்போவதாகவும் கூறியுள்ளார். இதனால் பாஜக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிகிறது. அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் மூத்த பாஜக தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அண்மையில்தான் உட்கட்சிப் பூசல் காரணமாக கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா விலகினார். இப்போது பசவராஜ் பொம்மைக்கும் சொந்தக் கட்சியினராலேயே நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

