ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் செலுத்திய 'ஜிஎஸ்எல்வி - எஃப் 10' என்ற உந்துகணை, தொழில்நுட்பக் காரணங்களால் தனது இலக்கை எட்டவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து முன்னேற்பாடுகளும் துல்லியமாக செய்யப்பட்டதை அடுத்து நேற்று காலை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அந்த உந்துகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது.
எனினும் சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து செலுத்தப்பட்ட உந்துகணை தனக்குரிய வட்டப்பாதைக்குள் நுழைவதற்கும் முன்பே திடீர் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, உந்துகணையில் உள்ள கிரையோஜெனிக் என்ற 'இன்ஜின்' பகுதியில்தான் இந்தக் கோளாறு ஏற்பட்டது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்ததாக 'பிபிசி தமிழ்' குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக உந்துகணை விண்ணில் செலுத்தப்பட்டதும் அந்த மகிழ்ச்சியை டுவிட்டரில் வெளிப்படுத்தியது இஸ்ரோ நிர்வாகம். பின்னர் சில நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறால் பின்னடைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த உந்துகணையை விண்ணில் செலுத்த ஏற்கெனவே இருமுறை திட்டமிட்ட போதும் காலநிலை, தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக தள்ளிவைக்கப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. இந்த உந்துகணை 2,268 கிலோ எடைகொண்ட ஒரு செயற்கைக்கோளை சுமந்து சென்றது. இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

