காஷ்மீர்: ஆயுதக்குவியல் கண்டுபிடிப்பு
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தில் இருந்து பெரும் ஆயுதக்குவியல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வடக்கு காஷ்மீரில் உள்ள பந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகள் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, மறைவிடம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது என்றும் அங்கு ஏகே 47 ரக துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், தோட்டாக்கள், வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது என்றும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
நிலச்சரிவு: 13 பேர் பலி; பலர் மீட்பு
டேராடூன்: இமாச்சலப் பிரதேசத்தில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவின் போது பல வாகனங்கள் மண் குவியலுக்கு கீழே சிக்கிக் கொண்டன. மீட்புப்பணி நீடித்து வரும் நிலையில், மேலும் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கணவருக்கு கோவில் கட்டி, சிலை நிறுவி வழிபடும் மனைவி
அமராவதி: நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் விபத்தில் இறந்துபோன தன் கணவரின் நினைவாக அவருக்கு கோவில் கட்டி வழிபடுகிறார் (படம்) ஆந்திராவைச் சேர்ந்த பத்மாவதி. ஒருமுறை தன் கணவர் கனவில் வந்து தமக்குக் கோவில் கட்டும்படி கூறியதாகவும் அதை நிறைவேற்றும் வகையில் கோவில் கட்டி அதில் கணவரது பளிங்கு உருவச் சிலையை நிறுவி வழிபட்டு வருவதாகவும் சொல்கிறார் பத்மாவதி. மேலும், கணவரின் பிறந்த நாள், நினைவு நாளன்று அவரது சிலைக்கு பூசை செய்து, அன்னதானம் வழங்கி வருகிறார்.
மேலும் ஐந்து காங்கிரஸ் தலைவர்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்
புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர்களின் டுவிட்டர் கணக்கு களை முடக்குவதன் மூலம் அக்கட்சியின் மக்களுக்காகப் போராடுவதை தடுத்துவிடலாம் என பிரதமர் மோடி கருது வதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் வினித் பூனியா கூறியுள்ளார். இது தொடர்பான டுவிட்டர் பதிவு ஒன்றில், ராகுல் காந்தியை தொடர்ந்து மேலும் ஐந்து காங்கிரஸ் தலை வர்களின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் அஜெய் மாக்கான், காங்கிரஸ் மக்களவை கொறடா மாணிக்கம் தாக்கூர், அசாம் காங்கிரஸ் பொறுப்பாளர் ஜிதேந்திர சிங், மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா, செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோரின் டுவிட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

