செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
43e5b164-772a-4562-816b-13db007b94a4
-
Google News Preferred Icon

உத்தரகாண்டில் இம்மாதம் 24ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

ேடராடூன்: உத்தரகாண்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அம்மாநில அரசு நேற்று காலை 6 மணி முதல் இம்மாதம் 24ஆம் தேதி காலை வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது.

அதேசமயம் ஊரடங்கு காலத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

சுகாதாரத் துறை அமைச்சின் புள்ளிவிவரத்தின்படி அம்மாநிலத்தில் 380 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் 7.226 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் முதல்முறையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட 5.502 மில்லியன் பேரும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க இயலாமைக்கு காங்கிரஸ்தான் காரணம்

புதுடெல்லி: முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கிய எண்ணெய்ப் பத்திரங்களால் ஏற்பட்டுள்ள கடன்சுமை மட்டும் இல்லையெனில் பெட்ரோல்-டீசல் விலை உயா்வை எளிதாக குறைத்திருக்கலாம் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இதுதொடா்பாக டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவா் கூறுகையில், "முந்தைய காங்கிரஸ் அரசு 1.44 லட்சம் கோடிக்கு எண்ணெய்ப் பத்திரங்களை வெளியிட்டு எரிபொருள் விலையைக் குறைத்தது. இந்த எண்ணெய்ப் பத்திரங்களுக்கு வட்டி செலுத்துவதால் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.70,195 கோடிக்கும் மேல் மத்திய அரசு வட்டி செலுத்தி உள்ளது. 2026க்குள் இன்னும் ரூ.37,000 கோடி அளவுக்கு வட்டி செலுத்தவேண்டிய தேவை உள்ளது.

"முந்தைய காங்கிரஸ் அரசு செய்த தந்திரத்தால் எங்களால் ஏதும் செய்ய முடியவில்லை. அதனால்தான் பெட்ரோல், டீசலின் விலையை எங்களால் குறைக்க இயலவில்லை. மக்களின் கவலை நியாயமானதுதான். ஆனால் மத்திய, மாநில அரசு விவாதித்து இதற்கு ஒரு வழியை உருவாக்கும் வரை அதற்கு தீர்வு இல்லை," என்றார் நிா்மலா சீதாராமன்.

உறவினர்களிடம் நேரில் பேசிய 180 சிறைக் கைதிகள்

சென்னை: கொரோனா காரணமாக சிறைவாசிகளை அவர்களது உறவினர்கள் காணமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து, தற்போது கைதிகளைச் சந்தித்து பேச உறவினர்களுக்கு தமிழக சிறைத்துறை அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறைக்கைதிகளின் நேர்முக சந்திப்பு நேற்று மீண்டும் தமிழக சிறைகளில் தொடங்கியது. ஒரே நாளில் 180 கைதிகள் நேரில் சந்திப்பு நடத்தி உள்ளதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள சிறைகளில் இருந்து 174 ஆண் கைதிகளும் ஆறு பெண் கைதிகளும் என 180 கைதிகள் தங்களது உறவினர்கள், நண்பர்கள், வழக்கறிஞர்களிடம் நேரடியாக தங்களது எண்ணங்கள், பிரச்சினைகளைப் பகிர்ந்துகொண்டனர். படம்: தமிழக ஊடகம்