திருவனந்தபுரம்: தலிபான் வசமாகி விட்ட ஆப்கானிஸ்தானில் சிக்கி இருக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்பும் வழி அறியாது தவித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஆப்கான் தலைநகர் காபூலில் இருந்து இந்தியத் தூதரும் தூதரக அதிகாரிகளும் இரண்டு இராணுவ விமானங்கள் மூலமாக பாதுகாப்பாக இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டுவிட்டனர்.
இதனையடுத்து, நாடு திரும்ப யாரைத் தொடர்புகொள்வது என்று தெரியாமல், எதிர்காலம் குறித்து அனைவரும் கவலை அடைந்து இருப்பதாக காபூலில் இருக்கும் 29 வயது கேரள இளையர் ஒருவர் கூறியதாக 'நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி தெரிவிக்கிறது.
"நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இங்குள்ள இந்தியர்கள் தகவல் பரிமாறிக்கொள்வதற்காக வாட்ஸ்அப் குழுவை உருவாக்கியுள்ளோம். இதுவரை 41 கேரள மாநிலத்தவரை அடையாளம் கண்டுள்ளோம். எங்களது மதிப்பிட்டபின்டி, காபூலில் மட்டும் 1,500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இருக்கலாம்," என்றார், உணவுப் பதப்படுத்தும் அமெரிக்க நிறுவனமொன்றில் வேலை செய்துவரும் அந்த ஆடவர்.
இந்தியர்கள்மீது தாக்குதல் நடந்ததாக எந்தத் தகவலும் பகிரப்படவில்லை என்றார் அவர்.
தாம் தங்கியுள்ள கட்டடத்திற்குப் பின்னால் உள்ள கட்டடத்திற்கு நேற்று முன்தினம் வந்த தலிபான் படையினர், முந்திய ஆப்கான் அரசாங்க ஆதரவாளர்கள் எவரும் உள்ளனரா என்று தேடியதாகவும் அவர்கள் செல்லும்வரை தாம் ஒரு மேசையின் அடியில் பதுங்கி இருந்ததாகவும் அந்த ஆடவர் சொன்னார்.
இப்போதைய சூழலில் உணவைவிட ஆப்கான் பெண்களின் பாரம்பரிய உடையான 'புர்கா'விற்குத்தான் மிகுந்த தேவை இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கொவிட்-19 தொற்று குறித்து யாரும் கவலைப்படவில்லை என்ற அவர், இந்திய ஊழியர்களுடன் பெண்களும் குழந்தைகளும் இருப்பதால் உடனடியாக அங்கிருந்து வெளியேறும் வழியை ஆராய்ந்து வருவதாகவும் சொன்னார்.
'அனைவரும் மீட்கப்படுவர்'
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்க கடப்பாடு கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
தூதரக அதிகாரிகள் அனைவரும் பாதுகாப்பாக நாடு திரும்பிவிட்ட நிலையில், இனி ஆப்கானில் உள்ள இந்தியக் குடிமக்களை அழைத்து வருவதில் கவனம் செலுத்தப்படும் என்று அமைச்சு குறிப்பிட்டது. காபூல் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதும் சிறப்பு விமானங்களை இயக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அமைச்சு கூறியிருக்கிறது.

