அசாம்-மிசோரம் எல்லையில் பதற்றம்
கௌஹாத்தி: அசாம்-மிசோரம் மாநில காவல்துறையினர்க்கு இடையே மோதல் வெடித்த மூன்று வாரங்களுக்குப் பிறகு, நேற்று முன்தினம் அதிகாலை மீண்டும் அம்மாநிலங்களுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது. இருப்பினும், உயிருடற்சேதம் எதுவும் ஏற்படவில்லை. மிசோரம் மாநிலப் பகுதியிலிருந்து கைபேசி விளக்கைப் போட்டபடி சிலர் வந்ததாகவும் அவர்களின் அடையாளத்தைக் கேட்ட போது அவர்கள் சுடத் தொடங்கியதால் பதிலுக்கு சுடும்படி ஆயிற்று என்றும் அசாமின் ஹைலகாண்டி மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் விவரித்தார்.
தேறியோர் விகிதம் கூடியது
புதுடெல்லி: இந்தியாவில் கொவிட்-19 தொற்றில் இருந்து மீண்டோர் விகிதம் 97.52 விழுக்காடாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு இதுவே ஆக அதிகம் எனக் கூறப்பட்டது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 35,178 பேர்க்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது; மேலும் 440 பேர் இறந்துவிட்டனர். இதனையடுத்து, மொத்த பாதிப்பு 32,285,857 ஆகவும் உயிரிழப்பு 432,519 ஆகவும் கூடிவிட்டது.
மருந்து இருக்கிறது, ஊசி இல்லை
கோல்கத்தா: கொவிட்-19 தடுப்பூசி மருந்தை வீணாக்காமல் பார்த்துக்கொண்டாலும் அளவிற்கு அதிகமாக ஊசிகளைப் பயன்படுத்தியதால் மேற்கு வங்க மாநிலத்தில் இப்போது ஊசிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, குறைந்தது இரண்டு மில்லியன் ஊசிகளைக் கொள்முதல் செய்யும் தேவை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
இந்திய விடுதலைப் போராட்டத்துடன் தலிபானை ஒப்பிட்டுப் பேசிய எம்.பி.
லக்னோ: தலிபான்கள் ஆப்கானிஸ்தானைத் தங்கள் வசப்படுத்தியது, இந்திய விடுதலைப் போராட்டத்தைப் போன்றதுதான் என்று ஒப்பிட்டுப் பேசிய சமாஜ்வாடி கட்சி எம்.பி. ஷஃபிகுர் ரகுமான் பர்க்மீது உத்தரப் பிரதேச மாநிலக் காவல்துறை தேச துரோகப் பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. "ஆப்கானியர்கள் தாங்கள் விரும்புவதுபோல் தங்களது நாட்டை ஆள நினைக்கின்றனர். அது அவர்களின் உள்நாட்டு விவகாரம். அதில் நாம் எப்படித் தலையிட முடியும்?" என்று செய்தியாளர்களிடம் ஷஃபிகுர் கூறியதாகச் செய்திகள் வெளியாயின. இந்நிலையில், தலிபான்களையும் இந்திய விடுதலைப் போராளிகளையும் தாம் ஒப்பிடவில்லை என்றும் தமது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். "நான் இந்தியாவின் குடிமகன். ஆப்கானிஸ்தான் குடிமகன் அல்லன். அதனால், அங்கு நடப்பதை அறிந்துகொள்வதில் எனக்கு எந்த ஆர்வமும் இல்லை," என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

