கோல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின்போது நிகழ்ந்த வன்முறை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு கோல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை எனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது திரிணாமுல் காங்கிரஸ், பாஜகவினர் இடையே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மோதல் வெடித்தது.
அப்போது பாஜகவினர் குறிவைத்து தாக்கப்பட்டதாகவும் சிலர் கொல்லப்பட்டதாகவும் புகார் எழுந்தது. வன்முறையின் முடிவில் மொத்தம் பத்து பேர் பலியானதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஏராளமான பாஜகவினர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் பல பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நிகழ்ந்ததாகவும் அக்கட்சி சாடியது.
இது குறித்து உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த நீதிமன்றம், தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இதையடுத்து நடைபெற்ற விசாரணையின் முடிவில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்தது.
இந்நிலையில், வன்முறை தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோல்கத்தா உயர் நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது. இதற்காக சிபிஐ சிறப்புக்குழு அமைக்க வேண்டும் என்றும் வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மாநில அரசு சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவை வரவேற்பதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் உத்தரவால் ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவு ஏமாற்றம் அளிப்பதாகவும் தேவைப்பட்டால் இத்தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்யப்படும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

