செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
79c889b1-f19e-4eae-9178-7321d12e8020
-

ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாகச் செயல்பட்ட இரு பெண்கள் கைது

திருவனந்தபுரம்: தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கேரளாவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாகச் செயல்பட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். மேலும், டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்க ளில் தேசிய புலனாய்வு முகமை அதிரடிச் சோதனை நட வடிக்கைகளை மேற்கொண்டது. கைதானவர்களிடம் நடத்தப் பட்ட தீவிர விசாரணையின்போது கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாகச் செயல்படுவது தெரிய வந்தது. இதையடுத்து இருவரும் கைதாகினர். இவர்கள் இருவரும் சமூக வலைத் தளங்கள் மூலம் ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவு திரட்டியதும் ஆள் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

நாடாளுமன்றம் விவாதங்களுக்கான இடம்: வெங்கையா நாயுடு அறிவுறுத்து

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நடக்கும் தரம் தாழ்ந்த நிகழ்வுகள் நாட்டின் மதிப்பைக் குறைத்துவிடுவதாக துணை அதிபர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். சில மாநில சட்டமன்றங்களிலும் இதுபோன்று நடப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். "நாடாளுமன்றம் விவாதங்களை மேற்கொள்வதற்கான இடம். அதை தொல்லை கொடுக்கும் இடமாக மாற்றக்கூடாது," என்று மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

பாலியல் பட வழக்கில் தொழிலதிபர்

ராஜ் குந்த்ராவைக் கைது செய்ய தடை

மும்பை: பாலியல் படங்கள் எடுத்தது தொடர்பான வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ராவைக் கைது செய்ய மும்பை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் தமக்கு முன்பிணை கோரி ராஜ் குந்த்ரா மனுத்தாக்கல் செய்துள்ளார். எனினும், அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், ராஜ் குந்த்ரா குறித்து கூடுதல் விவரங்களைத் தாக்கல் செய்ய அவகாசமும் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, எதிர்வரும் 25ஆம் தேதி வரை அவகாசம் அளித்ததுடன், ராஜ் குந்த்ராவை அதுவரை கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.

தமிழ் கல்வெட்டு விவரங்களை இணையத்தில் பதிவேற்ற நடவடிக்கை

மைசூரு: இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகம் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழி கல்வெட்டுத் தகவல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இணையத்தளத்தில் வெளியிடும் பணியைத் தீவிரப்படுத்தி உள்ளதாகத் தெரிகிறது. மைசூரில் உள்ள அதன் கல்வெட்டியல் பிரிவில் இந்தப் பணி நடைபெற்று வருகிறது. தமிழ் கல்வெட்டு நகல்களை படிக்கும் பணியில் ஓய்வுபெற்ற கல்வெட்டியலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இத்தகவல்களை ஆங்கில மொழிபெயர்ப்புடன் இணையத் தளத்தில் பதிவேற்றும் முயற்சியும் தொடங்கப்பட்டுள்ளது. இதை தமிழ் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். மேலும், தமிழ் கல்வெட்டுகளுக்கு என சென்னையில் தனி அலுவலகம் அமைக்கவும் வலியுறுத்தி உள்ளனர்.