புதுடெல்லி: இந்தியாவில் செப்டம்பர் இறுதி அல்லது அதற்குப் பின்பு குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குழந்தைகளுக்குப் போடக்கூடிய கோவேக்சின் தடுப்பூசி தற்போது இரண்டு, மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளது. அதன் முடிவு சாதகமாக இருக்கும் பட்சத்தில், இரண்டு முதல் 18 வயதுடையவர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கு அனுமதி வழங்கப்படும் என்று தேசிய தொற்று நோய் மையத்தைச் சேர்ந்த மருத்துவர் பிரியா அப்ரஹாம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நேற்று முன்தினம் 36,401 பேருக்கு புதிதாக கிருமி தொற்றியுள்ளது. 530 பேர் பலியாகிவிட்டனர். எனினும், கடந்த ஐந்து மாதங்களில் முதல் முறையாக அன்றாடம் பாதிக்கப்படுவோரின் வாராந்திர சராசரி எண்ணிக்கை 35 ஆயிரத்துக்கும் குறைவாகப் பதிவாகி உள்ளது.
இதற்கிடையே, கேரளாவில் கிருமித்தொற்றுப் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.
கடந்த புதன்கிழமை ஒரே நாளில் அங்கு மேலும் 21,427 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 179 பேர் பலியாகி உள்ளனர்.
இதன் மூலம் பலியானோர் எண்ணிக்கை 19,049ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் புதன்கிழமை அன்று 18,731 பேர் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் சுமார் 500 மில்லியன் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 565 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இதற்கிடையே, ஐநா அமைதி காக்கும் பிரிவைச் சேர்ந்தவர்களுக்காக இந்தியா 200,000 தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி உள்ளது.

