புதுடெல்லி: வடஇந்தியாவில் ரக்ஷா பந்தன் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களும் இவ்விழாவை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.
இந்தப் பண்டிகை நாளில் உடன் பிறந்த, உடன் பிறவா சகோதரர் களின் மணிக்கட்டில் ராக்கி கயிற்றைக் கட்டி பெண்கள் சகோதர உணர்வை வெளிப்படுத்துவர்.
அந்த வகையில் பாகிஸ்தானைச் சேர்ந்த சகோதரி ஒருவர், பிரதமர் மோடிக்கு கடந்த 20 ஆண்டு களுக்கும் மேலாக ராக்கி கயிறு, வாழ்த்து அட்டை ஆகியவற்றை அனுப்பி வாழ்த்து தெரிவித்து வருகிறார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த குவாமர் மோசின் ஷேக் என்ற இந்தப் பெண் திருமணம் முடிந்த பிறகு இந்தியாவில் குடியேறினார்.
தற்போது குஜராத்தின் அகமதாபாத் நகரில் இவர் வசித்து வருகிறார்.
பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் அமைப்பில் ஊழியராக இருந்த காலத்திலிருந்து அவருக்கு ரக்ஷா பந்தன் நாளை முன்னிட்டு ராக்கி கயிறு, வாழ்த்து அட்டைகளை வழங்கி ஆசி பெற்று வருகிறார்.
ஆனால் மோடி குஜராத் முதல்வரான பிறகும் பிரதமரான பிறகும் அவரை சந்திக்க முடியவில்லை என்பதால் தபால் மூலம் ராக்கி கயிறு, வாழ்த்து அட்டைகளை மோசின் ஷேக் அனுப்பி வருகிறார்.
இம்மாதம் 22ஆம் தேதி(நாளை) ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு, வாழ்த்து அட்டைகளை இவர் அனுப்பியுள்ளார்.
இது பற்றி பேட்டியளித்த குவாமர் மோசின், "என் சகோதரர் மோடிக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்துகள். ஒவ்வொரு நாளும் அவரின் நலத்துக்காகப் பிரார்த்திக்கிறேன்," என்றார்.
"விளையாட்டு வீரர்களுடன் சமீபத்தில் பிரதமர் மோடி பேசியதை ஒளிவழிகளில் பார்த்தேன். ஒரு விளையாட்டு வீரரின் தாயான என்னையும் என் குடும்பத்தாரையும் பிரதமர் மோடி டெல்லிக்கு அழைத்து ராக்கி கயிறு கட்டச் சொல்லுவார் என நம்புகிறேன்.
"என்னுடைய மகன் சூபியான் ஷேக், உலகிலேயே இளம் வயது நீச்சல் வீரர். பல விருதுகளையும், பதக்கங்களையும் வென்றுள்ளார்," என்று அவர் தெரிவித்தார்.
"நான் முதன்முதலில் ரக்ஷா பந்தனை மோடியுடன் 20 ஆண்டு களுக்கு முன் கொண்டாடினேன். அப்போது ஆர்எஸ்எஸ் தொண்டராக மோடி இருந்தார்.
"கடந்த 20 ஆண்டுகளாக பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்ட முயற்சி செய்து வருகிறேன்," என்று குவாமர் மோசின் ஷேக் தெரிவித்துள்ளார்.
ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி ஆசி பெறுவார்கள். அப்போது பணம், நகை, பரிசு ஆகியவற்றை சகோதரிகளுக்கு சகோதரர்கள் அன்பளிப்பாக வழங்குவது வழக்கங் களில் ஒன்று.