12 வயதிற்கு மேற்பட்டோர்க்குச் செலுத்த இந்தியா அனுமதி
புதுடெல்லி: அவசரகாலங்களில் ஸைடஸ் கேடிலா நிறுவனத்தின் ஸைகொவ்-டி கொவிட்-19 தடுப்பூசியைப் பயன்படுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
'டிஎன்ஏ' மரபணு மூலக்கூறு அடிப்படையில் உலகிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் செலுத்த முடியும். இந்த ஸைகொவ்-டி தடுப்பூசியை மூன்று தவணைகள் போட்டுக்கொள்ள வேண்டும்.
இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள ஆறாவது கொவிட்-19 தடுப்பூசி இது.
நாடு முழுவதும் 28,000க்கு மேலானோரிடம் மேற்கொள்ளப்பட்ட இறுதிக்கட்டச் சோதனை மூலமாக, அறிகுறியுடன் கூடிய கொரோனா தொற்றுக்கு எதிராக ஸைகொவ்-டி தடுப்பூசி 66.6% செயல்திறனைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.
அகமதாபாத் நகரை மையமாகக் கொண்ட ஸைடஸ் கேடிலா நிறுவனம், இந்திய உயிர்தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து இந்தத் தடுப்பூசியை உருவாக்கி இருக்கிறது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொவேக்சின் தடுப்பூசிக்குப் பிறகு, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு, அவசரகாலப் பயன்பாட்டு அனுமதி பெற்ற இரண்டாவது தடுப்பூசி இது.
ஸைகொவ்-டி தடுப்பூசி, புதிய உருமாறிய கொரோனா கிருமிகளுக்கு, குறிப்பாக டெல்டா கிருமிக்கு எதிராகச் செயல்திறன்மிக்கது என்று கடந்த மாதம் ஸைடஸ் கேடிலா நிறுவனம் தெரிவித்திருந்தது. வழக்கமான ஊசிகளில் மருந்தை ஏற்றிச் செலுத்தும்படியாக இல்லாமல், ஊசியில்லாக் கருவி மூலம் இத்தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம் என்றும் அந்நிறுவனம் கூறியது.
இருமுறை போடக்கூடிய தடுப்பூசிக்கு அனுமதி கோரவும் ஆண்டிற்கு 100-120 மில்லியன் தடுப்பூசிகளைத் தயாரிக்கவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மேலும் 375 பேர் உயிரிழப்பு
இதற்கிடையே, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 34,457 பேர்க்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; மேலும் 375 பேர் மாண்டுவிட்டனர். இப்போதைக்கு, 361,340 பேர் கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

