புதுடெல்லி: காபூல் விமான நிலையத்தைச் சுற்றிய பகுதிகளில் இருந்து 150க்கு மேற்பட்டோரை தலிபான் படையினர் பிடித்து வைத்துள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள் என்றும் பல்வேறு ஊடகங்களில் தகவல் வெளியானது.
இதனையடுத்து, காபூலில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய அரசாங்க வட்டாரங்கள் கூறின.
இருப்பினும், காபூலில் கிட்டத்தட்ட 150 இந்தியர்கள் கடத்தப்பட்டதாக வெளியான தகவலை தலிபான் பேச்சாளர்களில் ஒருவரான அகமதுல்லா வசெக் மறுத்தார்.
காபூலின் ஹமீத் கர்சாய் விமான நிலையத்தைச் சுற்றி தலிபான் படையினர் இருப்பதாகவும் அவர்கள் பொதுமக்களை விமான நிலையத்தில் நுழைய விடுவதில்லை என்று அவர் கூறியதாக உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தியக் குடிமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் அவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் இந்திய அரசாங்கம் தெரிவித்து இருக்கிறது. விமான நிலையத்திற்கு வெளியே தவித்தபடி இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப வழிவகை செய்ய அதிகாரிகள் குழு ஒன்று உதவி வருவதாகவும் கூறப்படுகிறது.
காபூல் விமான நிலையத்திற்கு வெளியே 100-150 இந்தியர்களை தலிபான் கடத்திச் சென்றுவிட்டதாக செய்தியாளர்கள் பலர் கூறினர். சமூக ஊடகங்களில் இத்தகவல் வெளியான சற்று நேரத்திற்குப் பிறகு, இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர்கள் காபூல் விமான நிலையத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் உள்ளூர் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, இந்திய விமானப் படை விமானம் மூலமாக 85 இந்தியர்கள் சொந்த நாட்டிற்கு மீட்டு வரப்பட்டனர். அவர்களுடன் இந்தியா செல்ல முயன்ற ஆப்கான் சீக்கியர்கள், இந்துக்கள் 72 பேரைத் தலிபான் தடுத்து நிறுத்தியதாக 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி கூறியது.
தூதரக வாகனங்கள் தலிபான்வசம்
இவ்வேளையில், ஆப்கானின் கந்தகார், ஹெராத் நகர்களில் உள்ள இந்தியத் துணைத் தூதரகங்களுக்குள் நுழைந்த தலிபான், அங்குஇருந்த ஆவணங்களையும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் எடுத்துச் சென்றதாகக் கூறப் படுகிறது. இம்மாதம் 15ஆம் தேதி காபூல் நகரைத் தலிபான் கைப்பற்றியபின், கந்தகார், ஹெராத், மசார்-இ-ஷரிஃப், ஜலாலாபாத் ஆகிய நகரங்களில் இந்தியத் துணைத் தூதரகங்கள் மூடப்பட்டன.

