40 கிலோ ஹெராயின் பிடிபட்டது
சண்டிகர்: இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரும் பஞ்சாப் மாநில காவல்துறையினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் 40.81 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பிடிபட்டது. அனைத்துலகச் சந்தையில் அதன் மதிப்பு ரூ.200 கோடி இருக்கும் எனக் கூறப்பட்டது. பாகிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட அந்த போதைப்பொருளை அமிர்தசரஸ் நகரைச் சேர்ந்த நிர்மல் சிங் என்பவர் பெறவிருந்ததாகக் கூறப்பட்டது. தலை மறைவாகவுள்ள நிர்மலைக் காவல்துறை தேடி வருகிறது.
பயிற்சியின்போது மயங்கி விழுந்த இராணுவத்தினர்; ஒருவர் மரணம்
பதான்கோட்: பஞ்சாப் மாநிலம், பதான்கோட் அருகேயுள்ள மாமுன் இராணுவ நிலையத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற பயிற்சியின்போது வெப்பம் தாங்காமலும் சோர்வடைந்ததாலும் 34 பேர் மயங்கி விழுந்தனர். அவர்கள் பதான்கோட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் இறந்துவிட்டதாகவும் நால்வரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி கூறியது.
ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் 935 கோடி ரூபாய் முறைகேடு
புதுடெல்லி: கடந்த நான்காண்டுகளில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் ரூ.935 கோடி முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஊரக வளர்ச்சி அமைச்சின் தரவுகள் மூலம் இது தெரியவந்துள்ளதாக 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. இதில் ஆக அதிகமாக, தமிழ்நாட்டில் ரூ.245 கோடிக்கு முறைகேடு இடம்பெற்றுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆந்திரா (ரூ.239 கோடி), கர்நாடகா (ரூ.173.6 கோடி) ஆகிய மாநிலங்கள் அடுத்த இரு இடங்களில் உள்ளன. முறைகேடு செய்யப்பட்ட தொகையில் இதுவரை 1.34% மட்டுமே, அதாவது 12.5 கோடி ரூபாய் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.
கூட்டாகப் போராடும் 19 கட்சிகள்
புதுடெல்லி: இந்தியாவை ஆளும் பாஜக அரசின் செயல் பாடுகளைக் கண்டித்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அடுத்த மாதம் 20ஆம் தேதி முதல் 30ஆம் தேதிவரை எதிர்க்கட்சிகள் கூட்டாக இணைந்து நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தவுள்ளன. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் நேற்று முன்தினம் காணொளி வழியாகக் கூடி ஆலோசித்தன. அப்போது, 2024 பொதுத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அக்கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தினர். அதன்பின், அரசாங்கம் 11 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபடவிருப்பதாக ஒரு கூட்டறிக்கை வாயிலாக அவை தெரிவித்தன.

