புதுடெல்லி: சனிக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக டெல்லியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் மாதம் இவ்வாறு கனமழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
டெல்லியில் வெள்ளிக்கிழமை இரவு முதல் பெய்யத் தொடங்கிய மழை, விடிய விடிய கொட்டித் தீர்த்தது.
24 மணி நேரத்தில் 139 மில்லிமீட்டர் அளவிலான மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் உறுதி செய்தது.
இதுவே, கடந்த 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் மாதத்தில் பதிவான அதிகபட்ச மழை என்று குறிப்பிட்டுள்ள அம்மையம், டெல்லியில் மிக அதிகபட்சமாக 1961ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 184 மில்லிமீட்டர் மழை பெய்ததாக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
கனமழையால் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததையடுத்து போக்குவரத்தும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் சில தினங்கள் மழை நீடிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் 'ஆரஞ்ச்' குறியீட்டு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே பீகாரிலும் கனமழை நீடித்து வருகிறது. அங்கு வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக 26 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என மாநில அரசு வலியுறுத்தி உள்ளது.

