ப.சிதம்பரம்: எதிர்க்கட்சிகள் ஒற்றுமையை பாஜக கேலி செய்யக்கூடும்
புதுடெல்லி: மற்ற உரிமைகளை விட சுதந்திரத்தைப் பெரிதாக கருதும் அனைவரும் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை உறுதிப்பாட்டை வரவேற்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அண்மையில், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் 19 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அதன் முடிவில், எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணைந்து ஒற்றுமையாக செயல்படுவதாக உறுதி அளித்துள்ளன. இதை தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள சிதம்பரம், இந்த ஒற்றுமையை பாஜக ஆதரவாளர்கள் கேலி செய்யக்கூடும் என்றும் அவர்களது விடுதலைக்கும் சேர்த்துத்தான் காங்கிரஸ் போராடுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
உலகின் உயரமான மூலிகை பூங்கா
புதுடெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டத்தில் சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் மூலிகை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இதுதான் உலகின் உயரமான இடத்தில் அமைந்துள்ள மூலிகை பூங்காவாகும். வனத் துறையின் ஆராய்ச்சிப் பிரிவு இந்த மூலிகை பூங்காவை மாநில அரசு உருவாக்கியிருக்கிறது. இந்திய-சீன எல்லையை ஒட்டியுள்ள மனா கிராமத்தில் நான்கு பிரிவுகளாக அமைந்துள்ள இந்தப் பூங்காவில், 40 வகையான மருத்துவ குணம் வாய்ந்த, அரிய மூலிகைச் செடிகள் வளர்க்கப்படுகின்றன.
'யூனிசெஃப்': பருவநிலை மாற்றத்தால் இந்திய குழந்தைகள் பாதிப்பு
புதுடெல்லி: பருவநிலை மாற்றம் காரணமாக உலகளவில் இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் வெகுவாகப் பாதிக்கப்படுவதாக 'யூனிசெஃப்' தெரிவிக்கிறது. தொடர் வெள்ளப்பெருக்கு, காற்று மாசு உள்ளிட்ட காரணங்களால் குழந்தைகளின் உடல்நலம், கல்வி ஆகியவை பாதிப்புக்குள்ளாகின்றன என்று அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்தியா தவிர பாகிஸ்தான், பங்ளாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய தெற்காசிய நாடுகளும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
தேர்தல் வன்முறை குறித்து விசாரிக்க நான்கு குழுக்களை அமைக்கும் சிபிஐ
கோல்கத்தா: மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதும் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக நான்கு தனிக்குழுக்களை அமைத்து விசாரணை மேற்கொள்ள சிபிஐ முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. எந்தெந்த மாவட்டங்களில் அதிக அளவிலான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்பதைக் கண்டறிந்து விசாரணைக் குழுக்கள் அமைக்கப்படும் எனத் தெரிகிறது. ஒவ்வொரு குழுவுக்கும் இணை இயக்குநர் ஒருவர் தலைமை ஏற்பார். கொலை, பாலியல் வன்கொடுமை தொடர்பாக தனித்தனியே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும். மாறாக, இரண்டுக்கும் சேர்த்து ஒரே தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட மாட்டாது என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக 'இந்துஸ்தான் டைம்ஸ்' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. வன்முறை, பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக நூற்றுக்கணக்கான புகார்களை விசாரிக்க வேண்டியுள்ளதாக சிபிஐ தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

