போபால்: மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜு யாத். கடந்த 2008ஆம் ஆண்டு பணத் தகராறு காரணமாக இவர் தன் உடன்பிறந்த சகோதரரைக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
பின்னர் இவரது மனைவி சகோத்ரா பாயும் கைதானார். இருவருக்கும் இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சகோத்ரா பாய்க்கு பிணை கிடைக்க, ராஜூ சிறையில் அடைக்கப்பட்டார்.
இத்தம்பதியரின் மூன்று குழந்தைகளும் பெற்றோரின் தொடர் பராமரிப்பும் அன்பும் இன்றி தவித்தனர்.
இந்நிலையில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜு தாக்கல் செய்திருந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட இருவரையும் நிரபராதிகள் எனத் தீர்ப்பளித்து விடுதலை செய்தது.
சிறையில் அடைக்கப்பட்டபோது ராஜுவுக்கு 48 வயது. அவரது மனைவிக்கு 45 வயது. ஏழு முதல் 15 வயதுக்குட்பட்ட இவர்களது மூன்று குழந்தைகளும் படிப்பை கைவிட நேர்ந்தது. பின்னர் இரு குழந்தைகள் கடைகளில் வேலை பார்த்து சம்பாதித்ததை வைத்து நாள்களைக் கழித்துள்ளனர்.
கடந்த 19ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையானார் ராஜு. தம்மைவிட மூன்று குழந்தைகளும் வெகுவாக பாதிக்கப்பட்டதாகச் சொல்கிறார்.
"என் பிள்ளைகளின் குழந்தைப் பருவம் பறிபோனது. கல்வியை இழந்தனர். பசியும் பட்டினியுமாய் தவித்தனர். கொலைகாரர்களின் பிள்ளைகள் என்ற பேச்சுக்கும் ஆளாகினர். என் மீதான பொய்யான குற்றச்சாட்டு காரணமாக எனது வாழ்வின் 13 ஆண்டுகளை இழந்துவிட்டேன். இந்த இழப்பை யார் ஈடு செய்வார்கள்," என்று கேள்வி எழுப்புகிறார் ராஜு.
மாநில அரசு இவருக்கு உதவ வேண்டும் என பலர் வலியுறுத்தி உள்ளனர்.

